ஊழ்வினைப்பயன்:கட்டியிருக்கும் துண்டும் பறிபோகின்றது?


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தற்பொழுது புதிய தலைவர் ஒருவருக்கு பதவியை வழங்கி விட்டு ஒதுங்கிக் கொள்வதே சிறந்தது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவராக நியமிக்க தகுதி பெற்றுள்ள சஜித் பிரேமதாசவுக்கு கட்சி தலைவர் பதவியை வழங்குவதில் யாருக்கும் பிரச்சினையாக இருக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பண்டாரகமயில் நேற்று(13) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
பாராளுமன்ற தேர்தல் முடிந்த பின்னர் கட்சி தலைமை பதவியை அவருக்கு வழங்குவதனால், கட்சிக்கு எந்தப் பயனுமில்லை. அவ்வாறு தெரிவிப்பது முட்டாள்தனமான வாதமாகும்.
சஜித் பிரேமதாசவுக்கு ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற முடியாவிட்டாலும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக, எதிர்க்கட்சிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன.
அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பிரதம வேட்பாளராக எதிர்க் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி சஜித் பிரேமதாசவை முற்படுத்துவதற்கு அனைவரதும் இணக்கம் காணப்படுகின்றது.
நாட்டின் ஜனாதிபதியாக போட்டியிடுவதற்கு முதிர்ச்சிபெற்றுள்ள சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சி தலைவராக நியமிப்பதற்கு, அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக்கும் அளவுக்கு தகுதி இருக்குமானால், கட்சியின் தலைவராக நியமிப்பதற்கு யாருக்கும் பிரச்சினையாக இருக்காது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

No comments