நிழல் தமிழரசின் பிரதான தமிழ் இராஜதந்திரி அன்ரன் பாலசிங்கம்!


1990ம் ஆண்டு இந்திய இராணுவம் இலங்கையை விட்டு வெளியேற்றப்பட்ட
பின்பு இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்குமிடையே சமாதானப் பேச்சுக்கள் இடம்பெற்ற காலகட்டத்தில் அப்போதைய இலங்கையின் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுக்கும், எங்கள் தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கத்துக்குமிடையே இடம்பெற்ற உரையாடலின் போது இருவராலும் பரிமாறிக் கொள்ளப்பட்ட கருத்துக்கள் அவை.

எமது தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைப் போன்றே எவராலும் விலைக்கு வாங்கப்பட முடியாத, ஒரு மகத்தான மேதையாக உயர்ந்து நின்றவர். அது மட்டுமன்றி பேச்சுவார்த்தைகளின் போதோ, சாதாரண உரையாடல்களின் போதோ எதிரிகளால் விரிக்கப்படும் வலைகளை வெகு லாவகமாகவே அவர்கள் மீதே திருப்பி வீசி அவர்களைத் திக்குமுக்காட வைப்பத்தில் தனித்துவமான ஆற்றல் பெற்றவர்.


அப்படியான ஆற்றல் வெளிக்காட்டப்பட்ட பல சந்தர்ப்பங்களில் ஒன்று தான் மேற்கொண்ட உரையாடல். தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆயுத வடிவம் இலங்கையில் எல்லைக்குள் இடம்பெற்ற போதிலும் இதன் அதிர்வுகள் சர்வதேச அளவில் பெரும் கவனத்திற்கு உட்பட்டிருந்தன. இப் போராட்டத்தின் வெற்றி தோல்விகளை மேற்குலக நாடுகள் ஒரு புறமும், இந்தியா இன்னொரு புறமும் தமக்குச் சாதகமாகக் கையாள முழு மூச்சுடன் ஈடுபட்டன. இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் காரணமாக இலங்கை அரசு தங்களில் தங்கிநிற்குமளவுக்கு ஒரு அச்சுறுத்தலாக இருக்கும் வகையில் எமது போராட்டத்தை மட்டுப்படுத்தவே அவை எந்நாளும் முயன்று வந்தன. அதன் காரணமாக வெளிப்படையில் எமக்கு ஆதரவு போலவும் அடிப்படையில் எமது போராட்டத்தை ஒரு கட்டத்திற்குள் வைத்திருக்கும் வகையில் தமது நகர்வுகளை மேற்கொண்டன.
எம்மைச் சுற்றி பல் வேறு சதிவலைகள் விரிக்கப்பட்டன.

இந்திய உளவு நிறுவனம் எமது விடுதலைப் போராட்ட அமைப்புக்குப் போட்டி அமைப்புக்களை உருவாக்கி எமது போராட்டத்தை நீர்த்துப் போக வைக்க சகல சூழ்ச்சிகளையும் மேற்கொண்டது. இது வெற்றி பெற முடியாத போது நேரடியாகவே படைகளை இறக்கி விடுதலைப் புலிகளையும் அதன் தலைவரையும் அழித்துவிட முயன்றது.

இப்படியான பலதரப்பட்ட நெருக்கடிகள் மத்தியிலும் எமது போராட்டத்தை தடம் பிறளாது கொண்டு செல்ல ஒரு காத்திரமான அணுகுமுறை தேவைப்பட்டது. அதாவது நாம் சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்தப்படாமலும் அதேவேளையில் சர்வதேச சதிகளுக்குள் சிக்கிவிடாமலும் நாம் எமது போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியிருந்தது. இங்கு தான் எமது தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் ஒப்பற்ற ஒரு ராஜதந்திரியாக உயர்ந்து நின்றார்.
இவர் வகுத்த ஒவ்வொரு திட்டமும், எதிரிகளை மட்டுமன்றி எமது போராட்டத்தை நிலைகுலைய வைக்க முயன்ற அத்தனை சக்திகளையும் தடுமாற வைத்தன. இந்தியாவின் ‘றோ’ உளவு நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு நயவஞ்சக நடவடிக்கைகளும் அவரால் இனங்காணப்பட்டு உடனுக்குடன் தவிடுபொடியாக்கப்பட்டன.

அதேவேளையில் மேற்குலகை எமக்குச் சாதகமான வழியில் நிலையெடுக்கும் வகையில் அவர் பல தந்திரோபாய நகர்வுகளை மேற்கொண்டார்.


“ஒரு போராட்டத்தில் யுத்த தந்திரம் எவ்வளவு முக்கியமானதோ அவ்வாறே தந்திரோபாயமும் அவ்வளவு முக்கியமானது. எவ்வளவு ஆற்றலுள்ள தந்திரோபாயம் மேற்கொள்ளப்பட்டாலுவும் பலவீனமான யுத்த தந்திரம் எவ்வாறு தோல்விக்கு இட்டுச் செல்லுமோ அவ்வாறே அவ்வளவு பலமான யுத்த தந்திரம் மேற்கொள்ளப்பட்டாலும் தவறான தந்திரோபாயம் பின்பற்றப்படும் போதும் தோல்வி தவிர்க்கப்பட முடியாததாகிவிடுகிறது”
இது சீனத் தலைவர் மா ஓ சேதுங் அவர்களின் இராணுவ வழிகாட்டல் கோட்பாட்டில் ஒன்றாகும்.


எமது தேசிய விடுதலைப் போராட்டத்திலும் எமது தேசியத் தலைவரின் யுத்த தந்திரம் எவ்வாறு எதிரிகளைத் திணறடித்ததோ அவ்வாறே எமது தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் தந்திரோபாய நகர்வுகள் வெற்றிகளை நோக்கி எம்மை முன்நகர்த்தின.


ஒட்டுமொத்த போராட்ட நகர்வுகளில் தந்ரோபாய நகர்வுகளை மேற்கொள்வதிலும் சரி, பேச்சுவார்த்தை மேசைகளில் எதிரிகளை முறியடிப்பதிலும் சரி அவரின் ஆற்றல் நிகரற்று விளங்கியது. விட்டுக்கொடுப்பது போல் போக்குக்காட்டிய பின் சுற்றி வந்து எதிரிக்கு தலையிடி கொடுத்துப் பணிய வைப்பதில் அவர் தனித்துவமான வல்லமை பெற்றிருந்தார்.1959ம் ஆண்டில் விடுதலைப்புலிகளை அழித்துவிட இந்தியப் படையினர் செக்மெற் 1,2,3 எனப் பெரும் படை நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும் அவர்களால் அந்த நோக்கத்தில் வெற்றி பெற முடியவில்லை. இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸவின் இந்திய எதிர்ப்புக் கொள்கையைப் பயன்படுத்தி அவருடன் இரகசியப் பேச்சுக்களை நடத்தி அவரிடமிருந்து விடுதலைப்புலிகள் ஆயுதங்களைப் பெற்றனர். அது மட்டுமன்றி பிரேமதாஸ மூலம் இலங்கையை விட்டு இந்தியப் படையை வெளியேற்றும் நிலையையும் உருவாக்கினர்.

 இக் காலகட்டத்தில் அன்ரன் பாலசிங்கம் எதிரிகளிடையேயுள்ள முரண்பாடுகளைப் பயன்படுத்தி எமக்குச் சாதகமான நிலையை உருவாக்குவதில் மகத்தான இராஜதந்திர நகர்வைக் கண்டு உலகமே வியந்தது.

இவ்வாறு ஓயாத அலைகள் மூன்று வெற்றி மேல் வெற்றி பெற்று யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுமளவுக்கு முன்னேறிய போது, வடக்கில் சிக்குண்ட இலங்கைப் படையினரைக் காப்பாற்றுவது என்ற பேரில் இந்தியப் படை இலங்கையில் இறங்கத்தயாரானது. இந்த நிலையில் விடுதலைப்புலிகள் ஒரு தலைப்பட்சப் போர் நிறுத்தத்தை மேற்கொண்டு பேச்சுக்கான அழைப்பை விடுத்தனர். அதன் காரணமாக இந்தியக் கொள்கை வகுப்பாளர்களின் சதி முறியடிக்கப்பட்டது.
இவ்வாறு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களடன் இணைந்து மேற்கொண்ட தந்திரோபாய நடவடிக்கைகள் எமது தேசிய விடுதலைப் போராட்டத்தை வெற்றியை நோக்கி மிக வேமாக நகர்த்தின.

எனினும் நோய்வாய்ப்பட்டு சிகிச்சைகள் பெறும் நோக்கில் லண்டன் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. எதிர்பாராத விதத்தில் அவரின் நோய் முற்றி திடீரென உயிர் பிரியும் நிலை ஏற்பட்டது.

விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகரும், மாபெரும் தத்துவ மேதையும், தமிழ் மக்களின் நெஞ்சில் நிறைந்தவருமான தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் எம்மைவிட்டுப் பிரிந்து எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்தினார்.


தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தில் அவர் வகித்த அரசியல் இராஜதந்திர வழிகாட்டல் துரதிஷ்டவசமாக வெற்றிடமாகியது. அவரின் மறைவு விடுதலைக்கான வெளியுறவுத் தொடர்பாடலில் பாரிய இடைவெளியை ஏற்படுத்தியது. நெருக்கடியான நேரங்களில் தலைவருக்கு துணையாக இருந்த தேசத்தின்குரலின் இழப்பின் பின்னர் அந்த இடம் வெற்றிடமாகவே இருந்தது.

திரு. அன்ரன் பாலசிங்கம் அவர்கள் பிறந்த இடமான அல்வாய் ஒரு இடதுசாரிக் கொள்கைகளின் அடித்தளமாக விளங்கியது. வீரகேசரியின் நிருபராக அரசியல் களத்துடன் தொடர்புகளை ஏற்படுத்திய அவர் வெகு விரைவிலேயே ஒரு சிறந்த ஊடகவியலாளரானார்.

இலண்டன் பல்கலைக்கழகத்தில் தத்துவப் படிப்பை மேற்கொண்ட அவர் மாக்ஸிச சித்தாந்தத்தையும், அதன் பின்னான வளர்ச்சியையும் ஆய்வு செய்து கலாநிதிப் பட்டம் பெற்றார். இலண்டனில் விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.

அக்காலத்தில் அடேலை திருமணம் செய்து கொண்டார். அவர் அடேல் பாலசிங்கத்தையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடுத்தினார்.

ஏகாதிபத்தியத்தின் உலகமயமாக்கல் என்ற பெரும் வலைப்பின்னலின் மேலாதிக்கக் காலகட்டத்தில் வர்க்கப் போராட்டம் தேசிய விடுதலைப் போராட்டமாகவே அமைய முடியும் என்ற அடிப்படை உண்மையைப் புரிந்து கொண்ட அவர் எமது தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுடன் இணைந்து தீவிரமாக ஈடுபட்டதுடன் அரசியல் வழிகாட்டியாகவும் விளங்கினார்.

அந்த மேதை இன்று எம்முடன் இல்லை. ஆனால் அவர் வரைந்த தத்துவார்த்தக் கட்டுரைகள் எமக்கு மட்டுமன்றி விடுதலை விரும்பும் அத்தனை மக்களுக்கும் தலைசிறந்த வழிகாட்டியாகவும் விளங்கும்.
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் இலட்சியக் கனவுகளை முன்னெடுப்பதில் அவர் காட்டிய வழியில் பயணித்து எமது விடுதலையை வெல்வோம் என உறுதி செய்கிறோம்

No comments