வவுனியா வடக்கு சிங்கள கட்சிகளிடம்?


வவுனியா வடக்கு பிரதேச சபையின் பாதீடு இரண்டாவது தடவையும் தோல்வி அடைந்துள்ளது.இதனால் சபையின் நிர்வாகம் சிங்கள பெரும்பான்மை கட்சிகளினை சென்றடையலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு வசம் உள்ள வவுனியா வடக்கு பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாவது வாசிப்பும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.

கடந்த 12 ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தொடரில் சபையின் 2020ம் ஆண்டுக்கான பாதீடு சபையில் சமர்பிக்கப்பட்ட நிலையில் அது தோல்வியடைந்திருந்தது.

இந்நிலையில் பாதீட்டின் இரண்டாவது வாசிப்பு தொடர்பில் கவனம் செலுத்துவதற்காக நேற்றைய தினம் விசேட கூட்டம் இடம்பெற்றிருந்தது.
இதன்போது உறுப்பினர்களின் வாதப்பிரதிவாதங்களின் பின்னர் மீண்டும் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

வாக்கெடுப்பின் போது பாதீட்டுக்கு ஆதரவாக கூட்டமைப்பின் எட்டு உறுப்பினர்களும் ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு உறுப்பினருமாக மொத்தம் 09 உறுப்பினர்களும் எதிராக 13 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதேவேளை நான்கு உறுப்பினர்கள் சபை அமர்வில் கலந்துகொள்ளவில்லை.

கடந்த முறை இடம்பெற்ற அமர்வின் போது வாக்கெடுப்பில் நடுநிலை வகித்திருந்த உபதவிசாளர் நேற்றைய வாக்கெடுப்பில் பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதோடு ஐக்கிய தேசி கட்சியை சேர்ந்த மூன்று உறுப்பினர்களில் ஒருவர் ஆதரவாக வாக்களித்ததுடன் மற்றைய இருவர் சபை அமர்வில் கலந்து கொள்ளவில்லை.

இதேவேளை ஐ.தே.கவின் மூன்று உறுப்பினர்கள் கடந்த அமர்வின் முதல் பாதீட்டிற்கான வாக்கெடுப்பின் போது எதிராக வாக்களித்தமை குறிப்படத்தக்கது.

No comments