தொடங்கியது வடக்கில் பணி?


யாழ்.குடாநாட்டின் முன்னணி சிவில் சமூக செயற்பாட்டாளரும் சட்டத்தரணியும் அரசியல் ஆய்வாளருமான சி.ஆ.யோதிலிங்கத்தின் வீட்டில் இன்று உடமைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது.பட்டப்பகலில் இக்கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ள போதும் அது உண்மையிலேயே கொள்ளை முயற்சிதானாவென்ற சந்தேகம் வலுத்துள்ளது.

நேற்றிரவு அவர் தொடர்ச்சியான அநாமதேய நபர்களது அச்சுறுத்தல்கள் மற்றும் இடையூறுகளை எதிர்கொண்டிருந்ததாக அவருடன் தொடர்புடைய  நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.
அவரது குடும்பத்தவர்கள் கொழும்பில் தங்கியுள்ள நிலையில் அவர் மட்டும் தனித்து உரும்பிராயில் வசித்து வந்துள்ளார்.

இ;ந்நிலையில் மூன்று தினங்களிற்கு முன்னராக தம்மை இலங்கை காவல்துறையினை சேர்ந்தவர்கள் என அடையாளப்படுத்திய இருவர் அவரது வீட்டிற்கு வந்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் நேற்றிரவு அவரது வீட்டின் அழைப்பு மணியை பல தடவைகளாக ஒலிக்க விட்ட மர்ம நபர்கள் பின்னர் தப்பித்து சென்றுள்ளனர்.இதனையடுத்து அவர் வழங்கிய தகவல் அடிப்படையில் நண்பர்கள் சிலர் வருகை தந்து அவருடன் தங்கியிருந்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை உரும்பிராய் சந்தியிலுள்ள தனது அலுவலகத்திற்கு அவர் சென்றிருந்த நிலையில் வீட்டில் கொள்ளையிடப்பட்டுள்ளது.
கொள்ளையர்களென வந்தவர்கள் அவரது ஆவணங்கள் இருந்த அலுமாரிகளை தேடி களைத்துள்ளதுடன் அவர் வசமிருந்த இரு கையடக்க தொலைபேசிகளை மட்டும் எடுத்து சென்றுள்ளனர்.

குறித்த தொலைபேசியினுடாக அவரது தொடர்பாடல்களை கண்டறியும் முயற்சியாவென்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டினையடுத்து வருகை தந்துள்ள இலங்கை காவல்துறையினர் நாளை காவல்துறை அலுவலகத்திற்கு நேரில்; வருகை தந்து முறைப்பாடு செய்ய ஆலோசனை தெரிவித்துள்ளனராம்.    

No comments