பிரித்தானியாவில் 'தமிழர் மரபு திங்கள்' பிரகடனம் தொடர்பிலான திறந்த கலந்துரையாடல்

தமிழர்களை பொறுத்தவரையில் மாதங்களில் சிறப்புமிக்க மாதமான தை மாதத்தை 'தமிழ் மரபுரிமைத் திங்கள்' என்று  பிரகடனப்படுத்தி தமிழர்களின்
தொன்மை, வரலாறு, கலை, கலாசாரம் மற்றும் பண்பாடுகளை பிரித்தானியாவில் மேன்மைபெற செய்வதற்கான இணைந்த வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் உள்ள தமிழ் அமைப்புக்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மத்தியில் நடைபெறவிருக்கும் இந்த கலந்துரையாடல் எதிர்வரும் 13 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை ) இரவு 7.30 மணி முதல் 9.30 மணிவரை The Manor House, Ealing Road, Northolt, Middlesex UB5 6AD என்ற இடத்தில் நடைபெறும்.

தை மாதத்தை ' தமிழர் மரபு திங்கள்' என்று பிரகடனப்படுத்தும் 'தமிழர் மரபு விழா' என்ற மாபெரும் நிகழ்வு ஒன்று  18 ஆம் நாள் ( சனிக்கிழமை) தை மாதம் 2020 மாலை 7 மணிக்கு பிரித்தானிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தினால் Zoroastrian Centre, 440 Alexandra Ave, Harrow HA2 9TL என்ற இடத்தில் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியுள்ள பின்னணியில் 13 ஆம் திகதி  கலந்துரையாடலுக்கு பிரித்தானியாவில் உள்ள சகல தமிழ் அமைப்புக்களையும் செயற்பாட்டாளர்களையும் பிரித்தானிய தமிழர் வர்த்தக சம்மேளனம் அழைத்துள்ளது.

ஒரு உயரிய நோக்கத்துக்கான நீண்ட ஒரு வேலைத்திட்டத்தின் ஆரம்பமே ஜனவரி 18 ஆம் திகதி நடைபெறும் 'தமிழர் மரபு விழா' ஆகும். பிரித்தானிய தமிழ் மக்கள் நாடு தழுவிய ரீதியில் வழங்கியுள்ள பல்வேறுபட்ட  பங்களிப்புக்களையும், தமிழ் மொழியின் சிறப்பு, தமிழர் தம் தொன்மை வரலாறு, பண்பாட்டு சிறப்பு மற்றும்  கலாசார செழுமை போன்றவற்றை கொண்டாடி மகிழ்ந்து பெருமையுற்று அவற்றை எமது எதிர்கால சந்ததியினருக்கு  கொண்டுசெல்வதற்கும் பிரித்தானிய சமூகத்துக்கும் பறைசாற்றுவதற்குமான ஒரு வரலாற்று நிகழ்வு இதுவாகும். இதன் தொடர்ச்சியாக பல்வேறு வேலைத்திட்டங்களை பிரித்தானியாவில் உள்ள தமிழ் மக்கள் ஆற்றவேண்டியுள்ளது.

ஜனவரி மாதத்தை 'தமிழ் மரபுத் திங்கள்' என பிரித்தானிய அரசாங்கத்தை அறிவிக்க செய்வதற்கு நாம் அனைவரும் படுபடவேண்டி இருக்கிறது. தமிழர்கள் செறிந்து வாழும் நகரங்களில் மாநகர அவைகளை முதலில் தமிழ் மரபுரிமைத் திங்களை அங்கீகரிக்க செய்வதற்கு நாம் அனைவரும் பணியாற்றவேண்டும்.  அதன்பின்னர்,  பிரித்தானியாவில் தமிழ் பாரம்பரிய மாத சட்டத்தை (Tamil Heritage Month Act) பாராளுமன்றத்தில் அங்கீகரிக்க செய்வதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.  அதேவேளை, நாம் மறந்துவிட்ட, தொலைத்துவிட்ட எமது கலை, கலாசார மற்றும் வரலாற்று சிறப்புக்கள், பெருமைகளுக்கு மீண்டும் உயிர்பூட்டி எம்மிடையே  விழிப்புணர்வையும் அறிவூட்டலையும் ஏற்படுத்த வேண்டிய வேலைத்திட்டங்களையும் நாம் முன்னெடுக்கவேண்டி இருக்கிறது.

தமிழ்மொழி இந்தியாவில் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் ஆட்சி மொழியாகவும், இலங்கையில் தேசிய மொழியாகவும், தமிழ் நாட்டு அரசின் ஆட்சி மொழியாகவும் உலகமெங்கும் அறியப்பட்ட மொழியாக விளங்குகிறது. பிரித்தானியாவில் இன்று நாடாளாவிய ரீதியில் தமிழர்கள்  கலாசாரம், பொருளாதாரம், அரசியல் என்று எல்லா துறைகளிலும் தம்மை அடையாளப்படுத்தி அளப்பெரும் பங்களிப்புக்களை ஆற்றிவரும் நிலையில், ஜனவரி மாதத்தை தமிழர் மரபு திங்களாக பிரகடனப்படுத்தி தமிழர்களின் அடையாளத்தையும் தனித்துவத்தையும் பறைசாற்றுவது சாலச் சிறந்ததும் பொருத்தமானதும் ஆகும்.

தை மாதம் தமிழர்களுக்கு மிகவும் முக்கியமான ஒரு மாதம். தமிழர் புத்தாண்டான தைப்பொங்கல் கொண்டாடப்படும் மாதம். அறுவடையால் மகிழ்ச்சி மிகுந்த மக்கள் தங்கள் கடவுள்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இம்மாதத்தில் பல்வேறு விழாக்களைக் கொண்டாடுகின்றனர். பல்வேறு வழிபாட்டு முறைகளும் இம்மாதத்தில் பின்பற்றப்படுகின்றன. அதனால் தை மாதத்தை 'தமிழர் மரபு திங்களாக' பிரகடனப்படுத்தி கொண்டாடுவது மிகவும் பொருத்தமானது.

வருடாவருடம் 'தமிழர் மரபு திங்கள்' கொண்டாட்டங்களின் மூலம் தமிழ் மொழி மற்றும் இலக்கிய அறிவை பகிர்ந்துகொள்வதுடன் அதன் சிறப்பை கொண்டாடலாம்,  எமது பண்பாடு, கலைகள், கலாசாரம் மற்றும் மரபுகளைக் எடுத்துக்கூறும் நிகழ்வுகளை ஒழுங்குசெய்து மகிழ்ந்துகொள்வதுடன் அவற்றை பேணிப் பாதுகாக்கலாம், தமிழர் அல்லாதவர்களோடு அவற்றை பகிர்ந்து கொள்ளலாம், மனித சமுதாய வளர்ச்சிக்கு   தமிழ் மொழி மற்றும்  இலக்கியம் வழங்கியுள்ள பங்களிப்பு,  கலை, கலாசார, சமூக மற்றும் அரசியல் ரீதியாக தமிழ் மக்கள் வரலாற்று ரீதியாக வழங்கியுள்ள பங்களிப்பு தொடர்பில் ஆய்வுகளை செய்து வெளியிடலாம்,  உலகம் முழுவதும் பரந்துவாழும் தமிழ் மக்கள் அரசியல் சமூக, விஞ்ஞான ரீதியாக மேற்கொண்டுள்ள சாதனைகள் பங்களிப்புக்களை வெளிப்படுத்தி பெருமை கொள்ளலாம். இவ்வாறு பல்வேறுபட்ட செயற்பாடுகளை நாம் அனைவரும் ஒன்றிணைந்து மேற்கொள்ளவேண்டி இருக்கிறது. இது ஒரு நீண்ட கால வேலைத்திட்டம். நாம் நிறைய பாடுபடவேண்டி இருக்கிறது. தனி ஒரு அமைப்பு இதனை செய்துவிட முடியாது. பிரித்தானியாவில் உள்ள எல்லா தமிழ் மைப்புக்களும், செயற்பாட்டாளர்களும் பொதுமக்களும் இந்த முயற்சியில் பங்கெடுத்துக்கொள்ளவேண்டும். எமது இந்த நோக்கத்தினை அடைவதற்கான இந்த நடவடிக்கைகளை எவ்வாறு ஒரு கூட்டு நிறுவன ரீதியான முன்னெடுத்துச்செல்லலாம் என்பதுபற்றி கலந்துரையாடுவதற்காகவே நாம் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஒன்றுகூடுகின்றோம். நீங்களும் தவறாமல் கலந்துகொள்ளுங்கள்.

No comments