முற்றுகிறது முறுகல்?


கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரக பணியாளர் கைது செய்யப்பட்டதை அடுத்து. சுவிஸ் வெளிவிவகார சமஷ்டி திணைக்களம் வெளியிட்ட அறிக்கைக்கு சிறிலங்கா அரசாங்கம் விரைவில் பதில் அளிக்கையை வெளியிடவுள்ளது.

சுவிஸ் தூதரக பணியாளர்  நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டதை அடுத்து, சுவிஸ் வெளிவிவகார திணைக்களத்தினால், சிறிலங்கா அரசாங்கத்தை விமர்சிக்கும், அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

‘இந்த அறிக்கையை கவனமாக ஆராய்ந்து வருகிறோம், மிக விரைவில் சரியான பதில் அளிக்கை ஒன்று வெளியிடப்படும்” என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர்  தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட சம்பவத்துடன், சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றும் மேலும் பல அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக குற்ற விசாரணைத் திணைக்களம் கண்டறிந்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்தார் என்று சுவிஸ் தூதரக பணியாளர் கானியர் பனிஸ்டர் பிரான்சிஸ், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பொய்யான குற்றச்சாட்டை சுமத்திய விடயத்தில், சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றும்  மேலும் பல அதிகாரிகளும் தொடர்புபட்டுள்ளனர். அவர்களில் பெண் அதிகாரிகளும் உள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண் பணியாளரின் அலைபேசி பதிவுகளில் இருந்தும் அவர் அளித்த வாக்குமூலத்தில் இருந்தும் இந்த நபர்களை குற்ற விசாரணைத் திணைக்களம் அடையாளம் கண்டுள்ளது.
அவர் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டார் என்ற கானியர் பிரான்சிசின் குற்றச்சாட்டு, முற்றிலுமாக இட்டுக்கட்டப்பட்டது என்ற முடிவுக்கு வந்திருப்பதாக குற்ற விசாரணைத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments