மட்டுவிலும் மணல் அகழ்வுக்கு எதிராக போராட்டம்

மட்டக்களப்பு - சித்தாண்டியின் சந்தனமடு ஆற்றுப் பிரதேசத்தில் நடைபெறுகின்ற சட்ட விரோத மண் அகழ்வினை தடை செய்யுமாறு கோரி அப்பிதேச மக்கள் இன்று (17) கவனயீரப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சித்தாண்டி பிரதேச பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த கவனயீர்பு போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை உறுப்பினர் மு.முரளிதரன், விவசாய மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.

சந்தணமடு ஆற்றில் மணல் அகழப்படுவதால் ஆறு அகலமாகுவதுடன் வெள்ளம் ஏற்படும் காலத்தில் ஆற்றினைக் கடக்கும் போது உயிராபத்து ஏற்படுகிறது. அது மாத்திரமின்றி மணல் வளத்தினை உள்ளக தேவைக்குப் பயன்படுத்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

ஆற்று மணலை ஏற்றி வீதியில் கொண்டு செல்வதனால் வீதி முற்றாக சேதமடைந்துள்ளது. குறித்த வீதியினைப் புனரமைத்து தருமாறும் போராட்டக்காரர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.

சுட்டவிரோத மணல் அகழ்விற்கு எதிராக 2015ஆம் ஆண்டு தை மாதம் 26ஆந்திகதி பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்ட எதிரப்பு நடவடிக்கையினால் அன்றய திகம் சந்தணமடு ஆற்றில் மணல் அகழ்வது தடைசெய்யப்பட்டது அதனைத் தொடர்ந்து 2015 மே மாதம் 5ஆந் திகதி நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் குறித்த விடயம் ஆராயப்பட்டு குறித்த பகுதியில் மணல் அகழ்வது முற்றாக தடை செய்யப்பட்டது.

தற்போது 2019 டிசம்பர் 09ஆந் திகதி முதல் மீண்டும் மணல் அகழ்வு இடம்பெறுகிறது. இதன் காரணமாக பனை மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. சந்தணமடு பிரதான வீதிமுற்றாக சேதமடைந்துள்ளது.

குறித்த பகுதியில் மணல் அகழ்வினை உடனடியாக தடைசெய்து சேதமடைந்த வீதியினைத் செப்பனிடப்பட வேண்டும் போன்ற கோரிக்கை அடங்கிய மகஜர் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூபரஞ்சனி முகுந்தன் மற்றும் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் நல்லையா வில்வரெட்னம் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.


No comments