நீதி கோரி மாபெரும் போராட்டம்! முல்லை மண் கண்ணீரில்


சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக நீதி கோரி வடக்கு கிழக்கு மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் முல்லைத்தீவில் இன்று (10) காலை மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவு நகருக்கு அண்மையிலுள்ள மருதமலை செபமாலை மாதா தேவாலயத்தில் இருந்து கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகி முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை சென்று மாவட்ட உதவி அரசாங்க செயலாளரின் ஊடாக அரசாங்கத்திற்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கு மகஜர் ஒப்படைக்கப்பட்டது.
இப்போராட்டதில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் எட்டு மாவட்ட தலைவிகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், பங்குத்தந்தை, பொதுமக்கள், அரசியல் பிரதிநிதிகள் என 500க்கு மேற்ப்பட்டோர் கலந்து உறவுகளை ஒப்படைக்கும்படி  உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமது பிள்ளைகளை புதிய அரசாங்கமே ஒப்படை, எங்களை ஏமாற்றும் OMP ஞ வேண்டாம், எமக்கு நீதி வேண்டும், சர்வதேச விசாரணை வேண்டும், உலக நாடுகளே எமது உறவுகளை பெற்று தர வேண்டும், கணவன்மாரை ஒப்படைத்த சின்னஞ்சிறு உறவுகளை எண்ணிப்பார், அப்பாவை தேடும் குழந்தைகளுக்கு என்ன பதில் போன்ற பல வாசகங்களை தமிழ், ஆங்கிலம், சிங்களம் போன்ற மொழிகளில் எழுதி கண்ணீருடன் நீதி கேட்டு பதாதைகளுடன் கவயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எந்த அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் போது எமது உறவுகள் வெள்ளைவானில் கடத்தப்பட்டும் இறுதி யுத்த காலப் பகுதியில் நேரில் கையளித்தும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டார்களோ அதே அரசு தற்போது மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கும் இச்சூழ்நிலையில் இவ் அரசிடம் எமது உறவுகளுக்கான நீதியினை பெற்றுக் கொடுக்குமாறு சர்வதேச சமூகத்தை வலியுறுத்தியே இப்போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்ட உறவுகள் தெரிவித்தார்கள்.
இதேவேளை காணாமல் ஆக்கப்பட்டோரின் முல்லைத்தீவு மாவட்ட போராட்டம் இன்று 1008 நாட்களை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments