மகிந்தபுரத்தின் பதின்மூன்று பிளஸ் கோதாபுரத்தில் மைனஸ் ஆயிற்று - பனங்காட்டான்



மகிந்த ராஜபக்ச தமது ஆட்சிக் காலத்தில் தமிழர் பிரச்சனை தீர்வுக்கு 13 போதாது, 13 பிளஸ் (ூ) கொண்டு வருவேன் என்றார். அது
வரவேயில்லை. இப்போது 13ஐ அமுல் செய்யுமாறு மோடி கேட்டபொழுது கோதபாய 13ஐ மைனஸ் (-) ஆக்கிவிட்டார். மகிந்தபுரத்தில் 13 பிளஸ் ஆகத்தெரிந்த தமிழர் அரசியல் தீர்வு, கோதபாய ஆட்சியின் முதல் மாதத்திலேயே 13 மைனஸ் ஆகிவிட்டது.

இலங்கை அரசியலில் செய்திகளுக்குப் பஞ்சமில்லாத காலம் இது.

பெற்றோர் இல்லாத அநாதைக் குழந்தைகள்போல ஆதரமற்ற செய்திகள் ஒருபுறத்தே கால் முளைத்து ஓடித்திரிகின்றன. சமூக ஊடகங்கள் தம் பங்குக்கு சில ஊகங்களைச் செய்திகளாக்கி காற்றில் பறக்க விடுகின்றன. அரசியல் தலைவர்களின் பெயர்களைப் பயன்படுத்தி வெளிவரும் சில்லறைச் செய்திகள் இன்னொருபுறம்.

இத்தனைக்கும் மத்தியில் உண்மையை உண்மையாய்ச் சொல்லும் செய்தியை தேடிக் கண்டுபிடிப்பது அப்பாவிப் பொதுமக்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.

இப்படிச் சொல்வதால் கேட்கும் சொல்லும் செய்திகள் அனைத்துமே பொய்யானவைகள் என்றோ கற்பனைகள் என்றோ சொல்லிவிட முடியாது.

தெற்கில் அரசியல் கட்சிகளுக்குள் இடம்பெறும் மோதல்களுக்கு நிகராக கட்சிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்வதால் நிகழும் சம்பவங்கள் ஏராளம். தமிழர் தாயகத்திலும் இதற்குக் குறைவில்லை.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அட்டமத்தில் சனியன் போன்று காரியங்கள் இடம்பெறுகின்றன. கட்சியின் தலைமையை தம்முடன் இறுக அணைத்து வைத்திருக்கும் இவர், நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் பதவியை சஜித் பிரேமதாசவுக்குக் கொடுத்துவிட்டதாக ஒரு செய்தி வந்துள்ளது.

இதனை நம்புவதா விடுவதா என்று அல்லாடிக் கொண்டிருக்கையில், ரணில் அரசியலிலிருந்து துறவறம் பூணவுள்ளதாக இன்னொரு செய்தி. இல்லையில்லை, அவர் சற்று ஓய்வு பெறுவதற்காக சில வெளிநாடுகளுக்குச் செல்கிறார், அவ்வளவுதான்! அவர் அரசியலிலிருந்து ஓய்வு பெறவில்லையென மற்றொரு செய்தி.

நாடாளுமன்றத்தை ஜனவரி 3ஆம் திகதி வரை கோதபாய தமது ஜனாதிபதி அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒத்தி வைத்துள்ளார். அதன் பின்னர் பெப்ரவரி நடுப்பகுதியில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படலாம்.

அப்படியானால், ஏப்ரல் கடைசி வாரத்தில் அல்லது மே மாத ஆரம்பத்தில் பொதுத்தேர்தல் நடைபெறக்கூடும். இந்த நிலையில், சஜித் பிரேமதாச எத்தனை நாட்கள் எதிர்கட்சித் தலைவராக இருக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இப்படித்தான் ஜனாதிபதித் தேர்தலில் கடைசி நேரத்தில் சஜித்தை போட்டியிட ரணில் அனுமதித்தது ஞாபகமிருக்கலாம். அது சஜித்தை வெற்றி பெறச் செய்யும் நோக்கத்தில் அல்ல. அவரை முகங்குப்புற வீழ்த்த ரணில் திட்டமிட்டு அதில் வெற்றியும் கண்டார்.

அதுபோலவே, எதிர்கட்சித் தலைவர் பதவியையும் இறுதி நேரத்தில் சஜித்துக்கு வழங்கியுள்ளார். அடுத்த இரண்டு மாதங்களில் ரணிலின் சூட்சுமம் நிச்சயம் தெரிய வரும்.

இதேபோன்ற சில பிரச்சனைகள் கோதபாய தரப்பிலும் ஆரம்பமாகியுள்ளது. மகிந்த தலைமையிலான புதிய கட்சியான பொதுபல பெரமுனவின் ஸ்தாபகர் அவரது சகோதரரான பசில் ராஜபக்ச. ஆனால் இங்கு பழம் பறித்தவர் கோதபாய.

ஜனாதிபதி பதிவ கிடைத்த பின்னர் கோதபாய பசிலை ஒதுக்கி தள்ளுவதைக் காணமுடிகிறது. சொல்லப்போனால் பசில் காணாமல் போகிறார். இந்த வாரம் இடம்பெற்ற மேற்படி கட்சியின் கூட்டத்தில் கோதபாய பிரதம பேச்சாளராகக் கலந்து கொண்டார். இக்கூட்டத்தை பசில் புறக்கணித்துவிட்டார்.

பிரதமராக இருக்கும் மகிந்தவைக்கூட இவர் மதிப்பதில்லை என சொல்லப்படுகிறது. இதனால் அவரது புதல்வர்களான நாமல் சகோதரர்கள் அடுத்த கட்டம் பற்றி சிந்திக்க ஆரம்பித்துள்ளனராம்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட ஒப்பந்தத்தில் சீனாவுக்கு மகிந்த வழங்கியதில் கோதபாய இப்போது குறை காண்கிறார். இதை மீளாய்வு செய்யப் போவதாகவும் சொல்கிறார்.

அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் நியமனங்களையும் தம் விருப்பப்படியே கோதபாய செய்துள்ளது மகிந்த குடும்பத்தை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

ஆட்சிக்கு வந்த முதல் மூன்று வாரங்களுக்குள்ளேயே கோதபாய தம்மைச்சுற்றி இராணுவ வலையம் ஒன்றை அமைத்துள்ளார். தாம் பணியாற்றிய கஜபா அணியின் முன்னாள் தளபதிகள் பலர் அவருக்கு இடமும் வலமுமாக பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். ஆட்சி ரகசியங்களை தமது சகோதரர்களுக்குக்கூட தெரிவிக்கக் கூடாதென சகபாடிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நிலைமை இப்படியே போகுமானால் அடுத்த ஐந்து வருடங்களுக்குள் ராஜபக்ச குடும்பத்துக்குள் பாரிய பிளவுகளும் பிரச்சனைகளும் ஏற்படலாமென பொதுபல பெரமுன முக்கியஸ்தர்கள் தங்களுக்குள் குசுகுசுக்க ஆரம்பித்துள்ளனர்.

தமிழர் தாயகத்தில் ஷஎல்லோரும் ஒன்றாக இணைவோம்| என்ற கோசம், காலத்தின் தேவையை ஒட்டியதுபோன்று கிளம்ப ஆரம்பித்துள்ளது. இதனை முதலில் வெளிப்படுத்தியவர் கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ. சுமந்திரன்.

கூட்டமைப்பின் செல்வாக்கு சரிந்து செல்வதால் அதனை நிமிர்த்த எடுத்த முயற்சியில் ஷநாங்கள் எவரையும் வெளியேற்றவில்லை. இப்போதுள்ள நிலையில் அவர்களுக்கு (சிங்களவர்களுக்கு) எங்கள் பலத்தைக் காட்டுவோம் வாருங்கள்| என்ற தோரணையில் சுமந்திரன் அழைப்பு விடுத்தார்.

இவ்விடயத்தில் ஒன்றை அவர் நன்கு அழுத்திச் சொன்னார். இணைவது என்பது கொள்கை ரீதியாக இருக்க வேண்டுமே தவிர ஆசனப்பங்கீடாக இருக்கக் கூடாதென அவர் அழுத்திச் சொன்னார்.

அதாவது கூட்டமைப்புக்கு வெளியே உள்ளவர்கள் எம்முடன் இணைந்தாலும், அவர்களுக்கு ஆசனப்பங்கீடு கிடையாது என்பதே இதன் அர்த்தம்.

இதற்குப் பதிலாக முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் அறிக்கை வந்தது. தமிழ் மக்களுக்கான மாற்றுத் தலைமையாக தங்கள் கூட்டணி வருகிறது என அவர் அறிவித்தார். மறுகணமே தாங்கள் தான் உண்மையான மாற்றுத் தலைமை என்று தமிழ் தேசிய முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் அறிக்கை விடுத்தார்.

இதற்கிடையில் ரெலோவிலிருந்து கடந்த மாதம் வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்ட சிறிகாந்தா அணியினர் புதிய அரசியல் கட்சியின் உருவாக்கம் பற்றிய அறிவித்தலை வெளியிட்டுள்ளனர்.

தமிழர் தலைமை என்ற மகுடத்தில் இன்னும் என்னென்ன  விண்ணானங்கள் இடம்பெறப் போகி;ன்றனவோ தெரியாது. போகிற போக்கைப் பார்த்தால் கடவுளால்கூட தமிழினத்தைக் காப்பாற்ற முடியாதுபோல் தெரிகிறது.

கோதபாயவின் முதலாவது வெளிநாட்டுப் பயணமாக அமைந்த இந்தியா பற்றியதான பல செய்திகள் இரு நாட்டு ஊடகங்களிலும் முக்கியம் பெற்றுள்ளது. இந்திய ஜனாதிபதி, இந்தியப் பிரதமர் உட்பட பல மட்டங்களிலும் கோதபாயவுக்கு அமோக வரவேற்பு. சீனா அழைத்து அங்கு செல்வதற்கு முன்னர் இந்தியாவுக்க அழைத்துவிட வேண்டுமென்ற திட்டம் அழகாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

எந்தச் சந்தர்ப்பத்திலும் இலங்கைத் தமிழர்கள் தம்மீது சந்தேகப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக தமிழர் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைக்க மோடி ஒருபோதும் மறந்துவிடுவதில்லை. இந்த விஜயத்தின்போதும் அது நடைபெற்றது.

இது போதும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு.

ரணில் தலைமையிலான ஆட்சியின்போது தீபாவளி, தைப்பொங்கள், புதுவருடங்களில் தீர்வு வருமென நம்பிக்கை தெரிவித்த இவருக்கு மோடியின் மீது அபார நம்பிக்கை வந்துவிட்டது.

1987இல் ராஜிவும் ஜே.ஆரும் செய்து கொண்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் 13வது திருத்தமே தமிழர்களின் அரசியல் தீர்வுக்கானதாக முன்வைக்கப்பட்டது. வடக்கையும் கிழக்கையும் நிரந்தரமாக இணைத்து ஒரு மாகாண சபையாக ஆக்குவது இது. இதற்கு கிழக்கு மாகாண மக்களிடம் கருத்து கணிப்பு நடத்த வேண்டுமென்பது இத்திருத்தத்தின் உபவிதிகளில் ஒன்று.

இது நடைபெறுவதற்கு முன்னரே இலங்கையின் உச்ச நீதிமன்றம் இந்த இணைப்பை சட்டத்தில் பிழை கண்டு ரத்தாக்கிவிட்டது. இதற்கான வழக்கைத் தாக்கல் செய்தவர்கள் ஜே.வி.பி.யினர்.

இந்த 13வது திருத்தத்தையே அமுல்படுத்துமாறு கோதபாயவிடம் மோடி கேட்டுக் கொண்டார். இந்தியாவின் இந்துப் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் இதற்கான பதிலை கோதபாய வழங்கியுள்ளார்.

'நான் எதனையும் ஒளிவு மறைவின்றி சொல்பவன்" என்ற பீடிகையுடன் பதிலை ஆரம்பித்த கோதபாய அது சாத்தியப்படாது என்று கூறிவிட்டார். பெரும்பான்மையினர் (சிங்களவர்) ஏற்றுக் கொள்ளாத ஒன்றை தன்னால் நிறைவேற்ற முடியாது என்று மோடிக்குப் புரியும் பாணியில் அந்த மண்ணில் நின்றே பதிலளித்துள்ளார் கோதபாய.

மகிந்த ராஜபக்ச தமது ஆட்சிக் காலத்தில் தமிழர் பிரச்சனை தீர்வுக்கு 13 போதாது, 13 பிளஸ் (ூ) கொண்டு வருவேன் என்றார். அது வரவேயில்லை. இப்போது 13ஐ அமுல் செய்யுமாறு மோடி கேட்டபொழுது கோதபாய 13ஐ மைனஸ் (-) ஆக்கிவிட்டார்.

மகிந்தபுரத்தில் 13 பிளஸ் ஆகத்தெரிந்த அரசியல் தீர்வு, கோதபாய ஆட்சியின் முதல் மாதத்திலேயே 13 மைனஸ் ஆகிவிட்டது. இதுபற்றி அடுத்து வரும் கட்டுரைகளில் விரிவாகப் பார்க்கலாம்.

No comments