கிளிநொச்சி,வவுனியாவில் மக்கள் போராட்டங்கள்!


இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸவின் காணாமல் போனோர் தொடர்பிலான கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இணைந்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

வடக்கு மாகாணத்தின் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் குறித்த் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச காணாமல் ஆக்கப்பட்ட எவரும் உயிரோடில்லை என அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் உறவுகளுக்கு நீதி கோரியும்,; கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதனிடையே வவுனியாவிலும்; இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1045 நாட்களாக போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களிற்கும் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று வவுனியாவில் இன்று இடம்பெறவிருந்த நிலையில் சந்திப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உருவப்படத்தினை தாங்கியிருந்தததுடன் ஐநாவே டக்ளஸை உடனடியாக கைதுசெய் உண்மைகள் வெளிவரும்' என்ற வசனம் பொறிக்கப்பட்ட பதாதையை ஏந்தியிருந்தனர்.

No comments