19:பண்பாட்டுப் பெருவிழா!


தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தின் தைப்பொங்கல் நிகழ்வும் பண்பாட்டுப் பெருவிழாவும் எதிர்வரும் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ் முற்றவெளி மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

வடகிழக்கு தாயக இளைஞர் யுவதிகளை ஒன்றிணைத்து 'உறவுகளின் ஒரு பிடி அரிசியில் உரிமைப் பொங்கல் எனும் தொனிப் பொருளிலேயே இந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்கு அனைத்துத் தரப்பினர்களும் தமது முழுமையான ஆதரவை வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கிலுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட இளைஞர் யுவதிகள் இணைந்த தமிழ் இளையோர் அமைப்பின் ஊடக சந்திப்பொன்று யாழ் ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போதே மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளனர். இது தொடர்பாக அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது.. 

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு வடகிழக்கிலுள்ள இளையோர்களையும் பல்கலைக்கழக மாணவர்களையும் ஒன்றிணைத்து இப்பொங்கல் நிகழ்வையும் பண்பாட்டுப் பெருவிழா நிகழ்வையும் மேற்கொள்கிறோம்.

எமது பண்பாட்டு பாரம்பரிய சீரழிவுகளுக்கு இளைஞர்கள் நாம் காரணமாகின்றோம் என்ற விமர்சனத்தை தவிடுபொடியாக்கும் படியாக இந்த நிகழ்வை நடாத்துவதற்குத் திட்டமிட்டுள்ளோம்.
வேகமான இந்த உலகில் எமது பண்பாட்டு பாரம்பரியங்கள் அழிவடைந்து வருவதை தினமும் உணர்கிறோம். அந்த வகையில் எமக்கே உரித்தான தனித்துவம் மிக்க எமது பண்பாட்டு பாரம்பரியங்களை வெளிப்படுத்துவதற்கு இப் பொங்கல் விழாவை ஒரு களமாகக் கருதுகின்றோம். 

யுத்தத்திற்குப் பின்னரான காலப் பகுதியில் பெண்களையும் சிறுவர்களையும் முதியவர்களையும் இணைத்து ஓர் பாரம்பரிய நிகழ்வுகளை தன்னெழுச்சியாக மேற்கொண்டதாக பதிவுகள் இல்லை. அந்த வகையில் சமூகத்தின் அனைத்து தரப்பினர்களையும் ஒன்றிணைப்பதாக இந்தப் பொங்கல் நிகழ்வு அமைகிறது.

 பல நாட்டுத் தலைவர்கள் தைப்பொங்கல் தினத்தன்று தமிழர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கின்ற இந்நாளில் உலகத்தாரின் கவனத்தை ஈர்க்கும் முகமாக தனித்துவமான எமது பண்பாட்டு பாரம்பரியங்களை மிடுக்குடன் வெளிப்படுத்துவோம்.

எமது தேசத்தில் முதன் முதலாக இன மத மொழி கட்சி பேதங்களையெல்லாம் கடந்து ஈழத்து இளையோர் யுவதிகள் என்ற அடிப்படையில் தன்னெழுச்சியாக தன்னெழுச்சியாக இப் பொங்கல் விழாவையும் எமது பண்பாட்டு பாரம்பரியங்களையும் சிறப்பிக்கவுள்ளோம். அந்த வகையில் தமிழ்ச் சமூகத்திலுள்ள அத்தனை உறவுகளையும் அன்போடும் உரிமையோடும் பற்றிக் கொள்கின்றோம். 

இதற்கமைய எதிர்வரும் 19 ஆம் நிகழவுக்கான எமது செயற்பாடுகளை நாளை புதன்கிழமை நல்லூர்க் கந்தன் ஆலயத்திலிருந்து ஆரம்பிக்க உள்ளோம். இதற்கு அனைத்துத் தரப்பினர்களும் தமது ஆதரவை எமக்கு வழங்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கின்றோம்.

இதனடிப்படையில் இந்த நிகழ்வுகள் திட்டமிட்டபடி 19 ஆம் திகதி காலை 9 மணிக்கு முற்றவெளியில் பொங்கல் வைத்து ஆரம்பமாகும். தொடர்ந்து அன்றையதினம் முற்பகல் 11 மணிக்கு கலை நிகழ்வுகளுடான பண்பாட்டு ஊர்வலம் முற்றவெளி மைதானத்தை வந்தடையும். 

இதன் பின்னர் நண்பகல் 12 மணிக்கு விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெறும். தொடர்ந்து மாலை 4 மணிக்கு பரதநாட்டியம், கிராமிய நடனம், வில்லுப்பாட்டு, கிராமியப் பாடல்கள், நுலர் வெளியீடு, தைப்பொங்கல் பாடல் இறுவெட்டு வெளியீடு, பட்டிமன்றம், என கலை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.

இந்தக் கலைநிகழவுகளுடன் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பெறுமதி வாய்ந்த பரிசில்களும் வழங்கி வைக்கப்படும். ஆகையனால் இந்தப் போட்டிகளில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் உங்கள் பெயர் விபரங்களை இளையோர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களிடம் வழங்கி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

No comments