போராடத் தமிழர் ஒற்றுமையே முக்கியம்

நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒரு குடையின் கீழ் ஒன்றித்து போராடினால் மட்டுமே எமது போராட்டத்தின் வலு அதிகரிக்கும் என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை ஞானப்பிரகாசம் அடிகளார் தெரிவித்துள்ளார்.

மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடனான விசேட சந்திப்பு இன்று (வெள்ளிக்கிழமை) காலை மன்னார் கலையருவி மண்டபத்தில் இடம் பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் போராட்டத்தினை வேறு முறைகளில் கையாள வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு தருகின்றோம் என காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் தெரிவிக்கின்றது.  எங்களுடைய போராட்டம் இவர்கள் தரும் 6 ஆயிரம் அல்லது 12 ஆயிரம் ரூபாவிற்குள் முடக்கப்பட்ட போராட்டம் இல்லை.

நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒரு குடைக்குள் வர வேண்டும். நாங்கள் ஒன்றாக செயல்பட்டால் மட்டுமே எமது போராட்டத்தின் வழு அதிகரிக்கும்.

காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள் இல்லை என்று சொல்லக்கூடாது. அவர்கள் இல்லை என்று சொன்னால் எங்கே அவர்கள்? இருந்தால் எங்களிடம் ஒப்படையுங்கள். அதன் பின் விசாரனைகளை செய்யுங்கள் என்கின்ற நியாயமான கோரிக்கையே எம்மிடம் உள்ளது.

எமது கோரிக்கை சர்வதேச ரீதியாக அங்கிகரிக்கப்பட்ட கோரிக்கை. எமது கோரிக்கையினை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளுகின்ற விதத்தில் முன்னெடுத்து எமது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.

தமிழ் மக்கள் மத்தியிலே ஒற்றுமை இல்லை.எல்லா இடத்திலுமே பிரிவுகள் உள்ளது.தமிழ் தேசியக்கூட்டமைப்பை பார்த்தால் பிரிந்து காணப்படுகின்றது.  தமிழர்களுக்கு ஒரு தீர்வை கொடுக்க முடியாத நிலை உள்ளது. வடக்கில் ஒரு ஆளுனரை நியமிக்க முடியாத நிலை காணப்பட்டது.

இப்படியாக ஒரு அரசியல் சூழ்நிலை காணப்படுகின்ற நிலையில் எங்களுடைய போராட்டக் களத்திலே நாம் தெளிவாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

No comments