தரகு வேலையில் கொழும்பு தமிழ் ஊடகவியலாளர்கள்?டக்ளஸ்


புதிய ஜனாதிபதி கோத்தபாயவுடன் கவனமாக புழங்கும் பண்பு அவரது அமைச்சர்களையும் தொற்றிக்கொண்டுள்ளது. நேற்று யாழில் பத்திரிகையாளர்களை சந்தித்த டக்ளஸ் பல கேள்விகளிற்கு பதிலளிக்காது அறளை கதைகளுடன் கடந்து செல்ல முற்பட்டார். அதற்கு விளக்கமளித்த அவர் அமைச்சர் என்ற வகையில் தான் பொறுப்புடன்(?) கதைக்க வேண்டியிருப்பதாக தெரிவித்தார்.

இடையிடையே தன்னை பற்றி திரிபுபடுத்தி எழுதினால் நீதிமன்ற படியேற வேண்டிவரலாமென மிரட்டல் விடுத்த அவர் இடையே தனது செய்தியை திரிபுபடுத்தியதாக செய்தி வெளியிட்டதாக கூறிவரும் பத்திரிகை உரிமையாளர் ஒருவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு சந்திக்கவும் அவர் அன்பாக கேட்டும் கொண்டார்.

இதனிடையே தன்னை பதவி விலகுமாறு கோரும் தகுதி சுமந்திரனுக்கு உள்ளதா என்று கேள்வி எழுப்பியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அரசியல் உள்ளோக்கத்துடனே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார் என்றும் குற்றம் சுமத்தியுள்ளார்.

கோத்தாபாய ராஜபக்ச அதிகார பகிர்வுக்கு மறுத்துள்ள நிலையில், அவருடைய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் டக்ளஸ் தேவானந்தா பதவி விலகுவது தொடர்பில் பரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் விடுத்த கோரிக்கை தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் சுமந்திரனின் கோரிக்கை உள்நோக்கம் கொண்ட கோரிக்கையாகும். அந்த கோரிக்கையில் நியாயங்கள் இருக்கின்றதா என்பதற்கு அப்பால் அது அரசியல் உள்ளோக்கம் கொண்ட கோரிக்கைதான். அந்த வகையில்தான் அவர் இவ்வாறான கருத்தை சொல்லியுள்ளார்.

தற்போதைய ஆட்சியாளர்களை நான் கொண்டுவரவில்லை. அந்த அரசில் நான் பங்கெடுத்திருக்கின்றேன தவிர அவர்களை நான் கொண்டுவரவில்லை. நாட்டிலுள்ள பெரும்பான்மை மக்கள்தான் இந்த ஆட்சியை கொண்டுவந்துள்ளார்கள்.

என்னுடைய தேசிய நல்லிணக்கம் காரணமாக எனக்கு அரசில் இடம் கிடைத்துள்ளது. உண்மையில் இந்த அரசியல் பங்கு கொள்வதற்கு விரும்பம் இல்லை. நான் தேர்தலில் வெல்லவில்லை என்பதால்தான் அதில் பங்கெடுக்க விரும்பவில்லை.

கொழும்பில் உள்ள தமிழ் ஊடகவியலாளர்கள், மத பெரியார்கள், புத்திஜீவிகள், பொது மக்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் கேட்டுக் கொண்டதற்கு இனங்கத்தான் அமைச்சுப் பொறுப்பினை ஏற்றேன்.

என்னை இப்போது சமுத்திரத்திற்குள் தள்ளி விடப்பட்டுள்ளது. என்னுடைய இரண்டு கைகளுக்குள்ளேயும் பெரிய கருங்கல்களை கட்டிக் காண்டுதான் நீந்துகின்றேன். தேசிய அமைச்சு, தமிழ் மக்களுடைய பிரச்சினை என்பதே அந்த இரு கருங்கல்லுகளாகும்.

கடந்த காலங்களில் சமுத்திரங்களில் நீந்தி அனுபவம் உள்ளது. நீந்த முடியாது என்று எனக்கு ஒன்றும் இல்லை. கருங்கல்லை கட்டிக் கொண்டு நீந்துவதா இல்லையா என்பது அப்போதுள்ள நிலமை.

சுமந்திரன் இந்த கோரிக்கையை என்னிடத்தில் கேட்பதற்கு அவருக்கு தகுதி இருக்கா? இல்லையா? என்பதற்கு அப்பால் உள்நோக்கத்துடனே அவர் சொல்லியுள்ளார் என்றார்.

No comments