விக்கி தலைமையில் விரைவில் மாற்று அணி

முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் புதிய மாற்று அணியை கொண்ட கூட்டணி விரைவில் உருவாகும் என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் உள்ள தனியார் விடுதியொன்றில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மத்தியகுழு இன்று (01) கூடியது. இதன் நிறைவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னரான அரசியல் நிலைவரங்கள் கள நிலைவரங்கள் பற்றி வடக்கு கிழக்கு மாகாணங்களின் பல மாவட்டங்களில் இருந்து வந்த எங்களது மத்தியகுழு உறுப்பினர்கள் தங்களுடைய கருத்துக்களை பரிமாறியிருந்தனர்.

இதன்போது எதிர்வரும் மாகாணசபை மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் முகங்கொடுப்பதற்கு எவ்வாறான ஏற்பாடுகளை செய்வது என்பது தொடர்பாகவும் நாங்கள் பல கருத்துப்பரிமாற்றங்களை செய்திருந்தோம்.

தமிழ் மக்களின் உரிமைகள் வெல்லப்படுவதற்கு ஓரணியில் நிற்கவேண்டும் என்பதில் எமக்கு மாற்றுக்கருத்துக்கள் இல்லை. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது அதற்கு உகந்த ஸ்தாபனமாக தன்னை மாற்றிக்கொள்ளவில்லை.

ஆகவே இவற்றினை எல்லாம் கவனத்தில் எடுத்து ஒரு மாற்றுத்தலைமை தேவை என்பதனை இன்றைய எமது மத்திய குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அது தொடர்பான நடவடிக்கைகளை எமது கட்சி முன்னெடுத்துச் செல்லும் - என்றார்.

No comments