ரணில் கட்டிமேய்த்தது தற்போது கோத்தாவிடம்?


2015ம் ஆண்டில் ஆட்சி மாற்றத்தினை கொண்டுவர முன்னின்று செயற்பட்ட கொழும்பு அரசசார்பற்ற அமைப்புக்களை தனது நேரடி கண்காணிப்பில் இயக்க கோத்தபாய திட்டமிட்டுள்ளதாக தெரியவருகின்றது.

நாட்டின் தேசிய பாதுகாப்பு விவகாரங்களிலும் அரசியல் நடவடிக்கைகளிலும் நேரடியாக செயற்பட்ட 1499 அரச சார்பற்ற அமைப்புக்களை உடன் அமுலுக்கு வரும் வகையில் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த காலத்தில் இந்த அரச சார்பற்ற அமைப்புக்களுக்கு வெளிநாடுகளிலிருந்து பாரியளவிலான நிதி கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அவற்றை எந்தவழியில் செலவு செய்தது என்பது தொடர்பில் அவ்வமைப்புக்களினால் தெளிவுபடுத்த முடியாதுள்ளதாகவும் அதற்கு விளக்கமளிக்கப்பட்டுவருகின்றது.

கொழும்பிலுள்ள அரச சார்பற்ற அமைப்புக்கள் நான்கிற்க்கு கடந்த வருடத்தில் 672 மில்லியன் ரூபா கிடைக்கப் பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்த அரசாங்க காலத்தில் இந்த அரச சார்பற்ற அமைப்புக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் காணப்பட்டதாகவும், பின்னர் நல்லாட்சி அரசாங்கத்தில் இவை பாதுகாப்பு அமைச்சிலிருந்து நீக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

எனினும் ரணில் தரப்பு குறித்த அரசசார்பற்ற நிறுவன விவகாரத்தினை தனது கைகளில் வைத்து புலம்பெயர் தமிழர் அமைப்புக்களை கையாண்டிருந்தது.

இதனிடையே நல்லாட்சி அரசாங்க காலத்தில் வடக்கு மாகாணத்தில் மாத்திரம் 15 இற்கும் அதிகமான அரச சார்பற்ற அமைப்புக்கள் அரசில் பதிவு செய்யப்படாமல் செயற்பட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments