யாழில் இரவோடிரவாக புத்தர் சிலை வைக்க முயற்சி?

யாழ். புதிய சிறைச்சாலை முன்பாக புத்தர் சிலை ஒன்றை இன்று (20) இரவோடு இரவாக வைத்து, திறப்பு விழாவை நாளை (21) காலை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு ஒரு திட்டம் நடைபெறுவது குறித்து நம்பத் தகுந்த தகவல் கிடைத்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி க.சுகாஸும் தெரிவித்துள்ளார்.

இவர் சற்றுமுன் பதிவிட்ட முகநூலில் பதிவில் "யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு முன் இரவோடிரவாக சங்கமித்தை மற்றும் புத்தர் சிலைகளை வைத்து நாளை காலையில் திறக்க ஏற்பாடுகள் நடைபெறுவதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன." எனக் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். மாநகர சபை எல்லைக்குட்பட்ட பண்ணைக் கடற்கரைக்கு அருகில் புதிய சிறைச்சாலை வளாகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்துக்கு முன்பாக புனரமைப்புப் பணி என்ற போர்வையில், சில நாட்களாக வேலைத் திட்டங்கள் நடைபெற்று, கட்டடம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் அங்கு புத்தர் சிலை ஒன்று வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

No comments