ரெலோ, புளொட் வந்தால் வரவேற்பில்லை!தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்து அதிலிருக்கின்ற கட்சிகளை எங்களுடன் இணைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. ஆகையினால் கூட்டமைப்பின் பங்காளிகளான ரெலோ, புளொட் வந்தாலும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சீ.வீ.விக்கினெஸ்வரன் தெரிவித்துள்ளார்.


மாற்று அணியென்பது தானாவே ஏற்பட வேண்டியதொன்று. நாங்கள் வந்து ஒவ்வொருவரும் மாற்றுக் கூட்டணி மாற்றுக் கூட்டணி என்று கூறுவதில் நன்மையில்லை. ஆனால் இது கொள்கை ரீதியாகப் போக வேண்டிய ஒரு விடயம். கொள்கை ரீதியாக யார் யார் ஒருமித்துச் சேர்ந்து பயணிக்க முடியுமோ அவர்கள் ஒருமித்து சேர்ந்து பயணிக்க வேண்டும்.தற்பொது ரெலோவில் இருந்து பிரிந்து வந்தவர்கள் கொள்கை ரீதியாக எங்களுடன் தான் என்று கூறுகிறார்கள். இவை எல்லாவற்றுக்கும் பொதுவாக நாங்கள் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறோம். அதன் அடிப்படையில் நாங்கள் எல்லோரும் சேர்ந்து முன்செல்லலாம் என்ற நிபந்தனையில் தான் இப்போது இருக்கிறோம்.ஆகவே எங்களுடன் கருத்தொருமித்து கொள்கை ரீதியாக ஒருமித்து பயணிக்கக் கூடிய சகலரையும் நாங்கள் ஏற்றுக் கொண்டு போக கூடிய ஒரு நிலை இருக்கிறது. ஆனால் நான் ஏற்கனவே ஒன்றைச் சொல்லியிருக்கின்றேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் கட்சிகளாக இருப்பவர்களை அங்கிருந்து வெளியேற்றி எங்களுடன் சேர்க்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.ஆகவே அவர்கள் தாங்களாவே கட்சியாக அங்கிருந்தால் அவர்கள் அங்கேயே இருக்கட்டும். நாங்கள் கொள்கை ரீதியாக வேறுபட்ட மக்களைத் தான் ஒருமித்து சேர்த்து முன்னே சென்று கொண்டிருக்கிறோம். மாற்று அணி என்பது அது போகும் விதத்திலே மக்கள் தீர்மானிக்கும் ஒரு விடயம். எனவே அதனைப் பொறுத்திருந்து பார்ப்போம்.இதே வேளை கூட்டமைப்பிலிருந்து அதன் பங்காளிகளான ரெலோ மற்றும் புளொட் உங்களது மாற்று அணியில் இணைவதற்கு வருமிடத்து ஏற்றுக் கொள்வீர்களான எனக் கேட்டதற்குப் பதிலளிக்கும் போது நாங்கள் அதை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்றார்.அதாவது அவ்வாறு அவர்கள் வந்தாலும் நாங்கள் அதை ஏற்றுக் கொள்ள மாட்டோம். ஏனென்றால் அவர்கள் இதுவரை காலமும் கொள்கை ரீதியாக அங்கிருந்து வெளியேறாமல் இந்த தேர்தலுக்காக வெளியேறி வரும் அவர்களை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.ஏனென்றால் கொள்கை சம்மந்தமான அவர்களுடைய மனோ நிலைபற்றி எங்களுக்கு சந்தேகங்கள் இருக்கின்றது என்பது ஒன்று. இதற்கு அடுத்து இரண்டாவதாக நான் ஏற்கனவே கூறியது போன்று கூட்டமைப்பை பிரித்தெடுத்த கட்சிகளை எங்களுடன் சேர்க்க வேண்டிய அவசியமும் எங்களுக்கு இல்லை. அதற்கு நாங்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தோம்.ஆகவே அவர்கள் எங்கிருக்கின்றார்களோ தொடர்ந்து அங்கேயே இருக்கட்டும். வெறும் தேர்தல் அரசியலுக்காக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு வந்து எங்களுடன் சேர்வதும் சேர்வதாகக் கூறுவதும் எல்லாம் அது ஏற்றுக் கொள்ள துடியாத ஒன்று. கொள்கை ரீதியாக நாங்கள் பயணிக்க முடியுமா என்பது தான் முக்கியம் என்றார்.

No comments