இறுதி முடிவு எப்போது? சுமந்திரன் விளக்கம்

ஜனாதிபதி தேர்தல் குறித்து கட்சியில் அங்கத்துவம் வகிக்கும் ஏனைய கட்சிகளின் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இறுதி நிலைப்பாடு அறிவிக்கப்படும் என அக்கட்சியின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமையிலான இலங்கை தமிழரசுக் கட்சி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் பிரதான கட்சியான தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் நேற்று வவுனியாவில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், ஜனாதிபதித் தேர்தலின் பிரதான வேட்பாளர்களான சஜித் பிரேமதாச மற்றும் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்டோரின் தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதான அங்கத்துவ கட்சியான தமிழரசு கட்சியின் இந்த தீர்மானம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவித்த அவர், “எமது மத்திய செயற்குழுவின் முடிவாக அன்னம் சின்னத்தில் போட்டியிடுகின்ற சஜித் பிரமதாசவை ஆதரிக்க வேண்டும் என்ற தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் இலங்கை தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ செயற்குழு எடுத்திருந்தாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியாக இருக்கின்ற காரணத்தினால் இதனை அறிவிப்பது மற்றும் தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லவேண்டிய விடயங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் கைகளில் நாம் ஒப்படைத்துள்ளோம்.

ஏனைய இரண்டு கட்சித்தலைவர்களோடும் கலந்தாலோசித்து இந்த தீர்மானத்தை அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொள்வார். பல விடயங்களை ஆராய்ந்திருக்கிறோம். பிரதான வேட்பாளர்கள் இருவர் குறித்துதான் எமது கருத்துக்கள் இருந்தது. அவர்களுடைய கடந்த கால செயற்பாடுகள், தேர்தல் அறிக்கைகள் தொடர்பாக பல விடயங்களை நாம் ஆராய்ந்து இன்றைய சூழலில் எமது மக்களுக்கு உபயோகமான ஒரு நடவடிக்கையாக சஜித்தை ஆதரிப்பதற்கான நிலைப்பாட்டை ஏகமனதாக எடுத்துள்ளோம்.

எமது கருத்தையும் மக்கள் கேட்கிறார்கள். மக்கள் திறமைசாலிகள் அவர்களிற்கு அரசியல் நன்றாகவே தெரியும். தமிழ் மக்கள் நிதானித்து வாக்களிப்பவர்கள். அவர்களிற்கு அரசியல் தலைமைத்துவம் கொடுக்கவேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கிறது. ஆகவே மக்களுடைய கருத்தையும் நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் மக்களுக்கு அரசியல் தலைமைத்துவம் வழங்குவது என்பது நீங்கள் விரும்புபவர்களுக்கு வாக்களியுங்கள் என்று கூறுவது அல்ல.

நிதானித்து தற்போது இருக்கும் அரசியல் சூழ்நிலையிலே தமிழ் மக்கள் சார்பாக ஏனைய தரப்புகளுடன் மக்களின் பிரதிநிகளாக நாம் பேச்சுவார்த்தை நடத்துகிறோம். அந்தக்கடப்பாட்டை நாம் சரிவர செய்வதாக இருந்தால் மக்களுக்கு ஒரு வழி காட்டுதல் வழங்கவேண்டிய அத்தியாவசிய கடப்பாடு இருக்கிறது அதை நாங்கள் செய்வோம்” என தெரிவித்தார்.

No comments