அதியுட்ச அதிகாரப் பகிர்வுடன் தீர்வு - சம்பந்தன் அதிரடி; கோத்தாவுக்கும் சவால்


அதியுட்ச அதிகாரப் பகிர்வுடன் நாம் தீர்வை பெறுவோம். எமது மக்கள் பாதுகாப்பாக, தமது சகல உரிமைகளையும் பெற்று, சுயமரியாதையுடன் வாழ்வதற்கு உரிய தீர்வை பெறுவோம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

நேற்று (10) சாவகச்சேரியில் இடம்பெற்ற சுட்டுக் கொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரான மாமனிதர் நடாராஜா ரவிராஜ்ஜின் நினைவு பேருரை நிகழ்வில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.

மேலும், அவர் பேசுகையில்,

நடராஜா ரவிராஜ் அவர்களுக்கு எதிரிகள் யாரும் இருக்கவில்லை. அவர் ஏன் கொல்லப்பட்டார் என்பது யாருக்கும் தெரியாது. சிங்கள மக்களிடம் சிங்கள மொழியில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தெரிவித்து மாற்றத்தை ஏற்படுத்தியதால் அவர் கொல்லப்பட்டார் என்ற கருத்து நிலவுகிறது.

ரவிராஜ் கொல்லப்பட்ட மறுநாள் மஹிந்த ராஜபக்ச தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்னிடம் தனது ஆதங்கத்தை தெரிவித்தார். நீங்கள அனுதாபம் தெரிவிப்பதால் என்ன நன்மை? என்று நான் கேட்டேன். யார்? ரவிராஜ்ஜை கொன்றது. ரவிராஜ் ஏன்? கொல்லப்படார். அதற்கு என்ன பதில்?. ஒன்றும் சொல்ல முடியவில்லை  அழைப்பை துண்டித்து விட்டார். மறுநாள் மீண்டும் அழைத்தார் தன்னால் ரவிராஜ்ஜின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள முடியாது. மனைவியை அனுப்புகிறேன். தயவு செய்து எதுவும் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார். எதுவும் நடக்காது நீங்கள் அனுப்பலாம் என்று குறிப்பிட்டேன். - என்றார்.

தொடர்ந்தும் பேசிய அவர் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தெரிவிக்கையில்,

சஜித் பிரேமதாச மற்றும் கோத்தாபய ராஜபக்ச இவர்களில் ஒருவர் தான் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறலாம் 2005ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வட, கிழக்கு மக்கள் பங்குகொள்ளவில்லை. இதன்காரணமாகவே மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியானா். அவரது ஆட்சியின் கீழ் 2005 - 2015 நடைபெற்ற சம்பவங்கள். அதன்மூலம் மக்கள் அனுபவித்த துன்பங்கள் பற்றி நான் கூறத் தேவையில்லை. அந்த தேர்தலில் நான் பங்கெடுத்திருந்தால் அந்த நிலை ஏற்பட்டிருக்காது.

ஜனாதிபதி பதவி சாதாரண பதவி அல்ல. அதில் அவர் யாராக இருக்க வேண்டும் என்பதற்கு எமது பங்களிப்பை செய்ய வேண்டும். அந்தப் பங்களிப்பை செய்ய வேண்டும் என்று நாம் முடிவெடுத்துள்ளோம். கோத்தாபயவும், சஜித்தும் ஆட்சியில் இருந்துள்ளனர். அவர்களது சரித்திர கோவை எம்மிடம் இருக்கின்றது. மனித உரிமை மீறல்கள், அடிப்படை மீறல்கள், கொலைகள், காணாமல் ஆக்கப்படுதல்களை செய்தது யார் என்பது எங்களுக்குத் தெரியும். எமது இரு எம்பிகள் கொல்லப்பட்டனர். மாணவர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சாதாரண பிரஜைகள் கொல்லப்பட்டனர்.

அந்த நிலை மீண்டும் வராமல் இருக்க நாம் பங்களிப்பு செய்ய வேண்டும். சஜித்தை நான் துவேசவாதியாக கருதவில்லை. நீண்டகாலமாக அவரை தெரியும். கோத்தாபய வெளியிட்ட விஞ்ஞாபனத்தில் அதிகாரப் பகிர்வு பற்றி கூறப்படவில்லை. செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கோருகிறோம் என்றும் தெரிவிக்கவில்லை. அவர்கள் கூறுகிறார்கள் நடந்தவற்றை மறந்துவிட்டு வாருங்கள் கூடிச் செல்வோம் என்று. எங்கு? கூட்டிச் செல்ல போகின்றனரோ தெரியவில்லை.

அவர்கள் இப்போது ஒரு விடயத்தை கூறுவதாக அறிந்தேன் அது உண்மையோ தெரியவில்லை. "எங்களுக்கு சிறுபான்மை மக்களின் வாக்குகள் தேவையில்லை. பெரும்பான்மை மக்களின் வாக்குகளில் மட்டும் வெல்வோம்" என கூறியுள்ளனர். ஏலுமெண்டால் வெல்லுங்கோ. எம்மை மிரட்டி, வெருட்டி நீங்கள் எதையும் அடைய முடியாது. ஆனால் நாம் ஒற்றுமையாக ஒரு முடிவை எடுப்போம்.

நான் சிவாஜிலிங்கத்தை அன்பாக கேட்கிறேன். தயவு செய்து தேர்தலில் இருந்து விலகிவிடுங்கள். யாருடைய வெற்றி சாதகமாக அமையும் என்பதை பார்த்து நாம சிந்திக்க வேண்டும். சில தமிழ் அரசியல்வாதிகள் கூறுகிறார்கள் முந்தி பதவியில் இருந்தவர்கள், இப்போது பதவிகள் இல்லாவர்கள் பதவிகளை எவ்விதத்திலும் பெற வேண்டும் என்று சிந்திப்பவர்கள், 'அதிகம் கேட்காமல் கடும்போக்கை பின்பற்றாமல். (நாம் கடும்போக்கு வாதிகள் அல்ல) சமாதானமாக பேசி பெறக்கூடியதை சொல்லி வெல்லப் போகும் கோத்தாபயவை ஆதரிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

நாம் எவரிடமும் பிச்சை வாங்கத் தயாரில்லை. தந்தை செல்வநாயகம் இலங்கை தமிழரசு கட்சியை ஆரம்பித்த போது, பெரியவர் எப்போதும் சொல்லுவார் சம்பந்தன் நாங்கள் நிதானமாக நடக்க வேண்டும். நாங்கள் பெரும்பான்மை தலைவர்களின் பதவிகளை தேடக்கூடாது. நட்புடன் நடக்க வேண்டும் அவர்களது மதிப்பை, நம்பிக்கையை பெற வேண்டும். எங்களுக்கு தீர்வு வரும். நாம் உறுதியாக நிக்க வேண்டும். நாங்கள் நிதானமாக செயற்பட வேண்டும் என்று சொல்லுவார். பெரியவர் பிச்சை வாங்க வேண்டும் என்று சொல்லவில்லை. எமது இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராடிய போது பிச்சை கேட்டுப் போராடவில்லை. இதை தலைவர்கள் உணர்ந்து கொள்ள வேணும். உங்களுக்கு பதவிகள் வேண்டுமானால் பதவிகளை பெறுங்கோ. அதற்காக எமது மக்களை விற்று பதவிகளை பெற வேண்டாம். பெறுவதற்கு உங்களுக்கு உரிமையில்லை.

எது பாதகம்? எது சாதகம்? என்பதை நாம் பார்த்து ஒற்றுமையாக ஒருமித்து 100க்கு 95% வாக்குகளிக்க வேண்டும். அப்படி நீங்கள் வாக்களித்தால் உங்கள் சிந்தனை நிறைவேற்றப்படும். இந்த ஜனாதிபதி தேர்தலும் எமது போராட்டத்தில் அடுத்த அடி. நாங்கள் எமது உறுப்பினர்கள் பலருடன் பேசியுள்ளோம். அதியுட்ச அதிகாரப் பகிர்வுடன் நாம் தீர்வை பெறுவோம். எமது மக்கள் பாதுகாப்பாக, தமது சகல உரிமைகளை பெற்று, சுயமரியாதையுடன் வாழ்வதற்கு உரிய தீர்வை பெறுவோம். நீண்டகாலமாக பெறாமல் இருந்திருக்கலாம் ஆனால் கனிசமான தூரம் பயணித்துள்ளோம். பெறக்கூடிய இடத்தில் தற்போது நிக்கிறோம். எனவே நாம் உறுதியாக ஒருமித்து நிக்க வேண்டும். - என்றார்.

No comments