சஜித் வருகையால் தமிழ், முஸ்லிம் ஒற்றுமை மேலோங்கும்

தமிழர், முஸ்லிம்களின்  ஒற்றுமையை நிலைப்படுத்த சஜித்தை வெல்லச் செய்வோம் என  அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
சஜித்தை ஆதரித்து மட்டக்களப்பு, ஓட்டமாவடியில் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி தலைமையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், தயாகமகே, இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா, முன்னாள் ஆளுநர்களான ஆசாத் சாலி, ரோஹித போகொல்லாகம மற்றும் முன்னாள் முதலமைச்சர் நசீர் அஹமட் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது அமைச்சர் ரிஷாட் உரையாற்றுகையில், “அரசியல் விரிசல்களுக்கு அப்பால் கட்சியின் நலனைக் காட்டிலும் சமூகத்தினதும், நாட்டினதும் நன்மை கருதி சஜித் பிரேமதாசாவை ஆதரிக்க ஒரே குடையின் கீழ் அணி திரண்டுள்ளோம்.
இந்த நாட்டை மீண்டும் இனவாதத் தீ கருக்கி விடக்கூடாது என்பதற்காகவும் பரம்பரை ஆட்சியொன்று மீண்டும் உருவாக இடமளிக்கக் கூடாது என்பதற்காகவுமே இத்தனை பிரயத்தனங்களை எடுத்துள்ளோம்.
கடந்த காலங்களில் நாம் பட்ட துன்பங்கள் மீண்டும் ஏற்படக் கூடாது. பேரினவாதிகள் அப்பாவித் தமிழர்களையும், அப்பாவி முஸ்லிம்களையும் கொடுமைப்படுத்திய யுகத்தை உருவாக்க நீங்கள் எவருமே துணை போகக் கூடாது.
நாம் இழப்பதற்கு எதுவுமே இல்லை. கடந்த காலம் நமக்கு ஒரு படிப்பினையாக அமைந்து விட்டது. மத வாதத்தையும், இன வாதத்தையும் கிளறி எங்களை அடக்கி ஒடுக்க முயன்ற சக்திகளுக்கு இந்த தேர்தலின் மூலம் சரியான கடிவாளம் போடப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

No comments