ஒட்டுக்குழுக்களுடன் செய்த டீல் என்ன? சஜித் சவால்

பிள்ளையாள், வரதராஜப்பெருமாள், கருணா அம்மான் மற்றும் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா ஆகியோருடனான இரகசிய கொடுக்கல் வாங்கல்கள் எவ்வாறானவை என தெளிவுபடுத்துமாறு எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸ இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
கொலை குற்றச்சாட்டில் சிறையிலுள்ள பிள்ளையானின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்காக, அவரை விடுவிப்பதாக மஹிந்த ராஜபக்ஸ உறுதியளித்துள்ளதாக சஜித் பிரேமதாஸ அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்டவிரோதமாக ஈழத்தை அறிவித்து, ஈழக்கொடியை ஏந்திய வரதராஜப்பெருமாளின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கு எவ்வாறான வாக்குறுதிகள் வழங்கப்பட்டன எனவும் இந்தக் கடிதத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
600 பொலிஸ் அதிகாரிகளைக் கொலை செய்த, தலதா மாளிகை மீது குண்டுத்தாக்குதல் நடத்திய, அரந்தலாவை கொலையை செய்த கருணா அம்மானுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இரகசிய உடன்படிக்கை எவ்வாறானது என தெளிவுபடுத்துமாறும் சஜித் பிரேமதாஸ எதிர்க்கட்சித் தலைவருக்கு சவால் விடுத்துள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதியாகக் கூறப்பட்ட எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, இரண்டாவது விருப்பு வாக்கை சகோதரருக்கு அளிக்குமாறு கோருவதற்காக வழங்கிய இரகசிய வாக்குறுதி என்னவென தெளிவுபடுத்துமாறும் இந்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

No comments