தமிழர்களை விடுவிக்க சொன்னால் இனவாதம் பேசுகின்றனர்: ரிஷாட்

நாட்டில் இனவாதிகளின் ஆதிக்கத்தை இல்லாதொழிக்க வேண்டுமானால் புதிய தேசிய ஜனநாயக முன்னணியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு மக்கள் ஆதரவு வழங்க வேண்டுமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ரிஷாட் பதியுதீன் மேலும் கூறியுள்ளதாவது,  “சிறுபான்மை மக்களுக்கு எதிராக செயற்படும்  இனவாதிகளுக்கு இந்த தேர்தலில் சிறந்த பாடத்தை கற்பித்து கொடுக்க வேண்டும்.
நமது சமூகம் தன்மானத்துடனும் தலைகுனிவின்றியும் வாழவேண்டும் என்பதற்காகவே சஜித் பிரேமதாசவை ஆதரிக்கின்றோம்.
மேலும் இனவாதிகள் மதக் கடமைகளை கூட நிறைவேற்றுவதற்கு தற்போது தடையாக உள்ளனர். மதத் தலங்களை உடைக்கின்றனர்.
எங்களை தீவிரவாதிகளாகவும் இனவாதிகளாகவும் சித்தரித்து இந்த நாட்டில் பெரிய பிரளயம் ஒன்றை கிளப்பி வருகின்றனர்.
சிறையில் வாடும் தமிழ் இளைஞர்களை விடுவிக்கச் சொல்லி கோரிக்கை விடுத்தால், அதனை இனவாதமாக காட்டுகின்றனர்.
காணாமல் போனவர்களை கண்டுபிடித்துத்தருமாறு கேட்டால் அதுவும் அவர்களால் இனவாதமாக பார்க்கப்படுகின்றது. நாங்கள் எவருக்கும் இரண்டாம் தரப்பிரஜைகளாக வாழவேண்டிய அவசியம் கிடையாது.
தன்மானத்துடனும் சுயகெளரவத்துடனும் பெரும்பான்மை சமூகம் அனுபவிக்கும் அத்தனை உரிமைகளையும் பெற்று வாழ்வதற்கு நாம் உரித்துடையவர்கள்.
அவ்வாறான ஒரு சூழலை ஏற்படுத்துவதற்கு நல்ல ஒரு தலைவனாக சஜித் பிரமேதாசவை இனங் கண்டுள்ளோம். எனவே அவரை நாட்டின் ஜனாதிபதியாக வரவைக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

No comments