மலையகத்தின் மாற்றம் சஜித் ஊடாக வரவுள்ளது

மலையக மக்கள் சோற்றுக்கும், மதுவுக்கும் சோரம் போனவர்கள் அல்லர் என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
ஹற்றன் டி.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற தொழிலாளர் தேசிய சங்கத்தின் 3ஆவது பேராளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரவித்தார்.
இக்கூட்டத்தில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், சரஸ்வதி சிவகுரு, எம்.ராம், எம். உதயா, பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “நாங்கள் மலையக மக்களுக்கான தேவைகளை பூர்த்திசெய்து விட்டு அவர்களிடம் வாக்குகளை கேட்கின்றோம். ஆனால் சிலர் மலையக மக்களை அடகு வைத்து அவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள வலம் வருகின்றனர்.
எதிர்வரும் 16ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலில் சஜித்துக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் தொழிலாளர் தேசிய சங்கம் மக்களை வேண்டிக்கொள்கின்றது.
மலையகத்தில் மறுமலர்ச்சி மிக்க மேலும் ஒரு மாற்றத்தினை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் ஊடாக நடைமுறைக்கு வரும். அது சஜித் பிரேமதாசவின் ஊடாக வரவிருக்கின்றது.
புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மலையக மக்களுக்கு சிறப்பான அபிவிருத்தி திட்டங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில் பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மலையக மக்களுக்கு மாடி வீடுகள் மற்றும் ஆயிரம் ரூபாய் தருவதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மலையக மக்களுடைய மறுமலர்ச்சிக்காக ஒரு மாற்றத்தை கொண்டு வரும் ஜனநாயக தலைவராக சஜித் பிரேமதாச விளங்குகின்றார். ஆனால் அராஜகவாதியாக கோட்டபாய ராஜபக்ஷ திகழ்கின்றார்.
எதிர்வரும் 16ஆம் திகதி இந்த நாட்டின் தலை எழுத்தையும் மலையக மக்களுக்கு ஒரு மாற்றத்தையும் உருவாக்க அன்னம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். காரணம் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச மலையக மக்களுக்கு பிரஜா உரிமையை பெற்றுக்கொடுத்தார்.
அவருடைய புதல்வருக்கு நாம் வாக்களித்து அமோக வெற்றியுடன் ஜனாதிபதியாக்க வேண்டும்” என தெரிவித்தார்.

No comments