தமிழ் அரசியல் கைதிகள் கொலை செய்யவில்லை- ராஜித

தமிழ் அரசியல் கைதிகள் யாரும் கொள்ளையடித்தோ, கொலை செய்தோ சிறை செல்லவில்லை. அவர்கள் அரசியல் ரீதியாக போராடியவர்கள். மீண்டும் ஆட்சிப்பீடம் ஏறியதும் அனைத்து அரசியல் கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள் என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
அத்தோடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டவர்கள் பொதுமன்னிப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
யாழில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்|, “கடந்த ஆட்சியில் வடக்கில் மட்டும் 39 ஊடகவியலாளர்களை கொன்றார்கள். அதற்கு உங்கள் அரசு என்ன செய்தது என நீங்கள் கேட்கலாம். நாங்கள் அந்த கொலைக் கலாச்சாரத்தை நிறுத்தினோம். அது தொடர்பான விசாரணையை தொடங்கினோம். அது இன்னும் முடியவில்லை.
இம்முறை நாங்கள் வெற்றிபெற்றதும் உங்களிடமிருந்து பெற்ற ஒவ்வொரு அங்குல காணியையும் திரும்பி தருவோம். விடுதலைப்புலிகளுடன் தொடர்பிருந்ததோ இல்லையோ சிறையிலுள்ள உங்கள் சகோதரர்கள் உடனடியாக விடுவிக்கப்படுவார்கள்.
வழக்கிலிருப்பவர்கள் பொதுமன்னிப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்படுவார்கள். அவர்கள் யாரும் தனிப்பட்ட ரீதியில் கொள்ளையடிக்கவோ, கொலை செய்யவோ இல்லை. அவர்கள் அரசியல் ரீதியாக ஒரு அமைப்பிலிருந்து போராடியவர்கள்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாயாருடன் நான் இரண்டுமுறை போராடி ஜனாதிபதியிடம் அழைத்து சென்றேன். ஆனால் சரியான முடிவு கிடைக்கவில்லை. ஆட்சிபீடமேறியதும் அவர்களின் பிரச்சனையை சரியாக ஆராய்ந்து, அவர்கள் இருக்கிறார்களா என பார்த்து இல்லாவிட்டால் மரணசான்றிதழ் வழங்க நடவடிக்கையெடுப்போம்” என  மேலும் தெரிவித்தார்.

No comments