தமிழருக்கு சஜித் உரிமை தருவார் - பொன்.ரவீ

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மாகாணத்திற்கான அதிகாரம் எனும் விடயம் சேர்க்கப்பட்டுள்ளமையானது, தமிழ் மக்களுக்கான உரிமையினை வழங்குவதற்கான நல்ல சமிஞ்ஞையாகும் என ஐக்கிய தேசிய கட்சியின் கல்குடா தொகுதி அமைப்பாளர் பொன்.ரவீந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நேற்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்'

ஜனாதிபதித் தேர்தலானது மிகவும் முக்கியம் வாய்ந்த தேர்தலொன்றாகும். அந்தவகையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக நாம் கடுமையாக உழைக்கின்றோம். நிச்சயம் அவர் இந்த தேர்தலில் வெற்றி பெறுவார். சிறுபான்மை சமூகம் இந்த இலங்கைத் தீவில் அமைதியான முறையில் வாழ்வதற்கு சஜித் பிரேமதாசவின் வெற்றி மிக முக்கியத்துவமிக்கதாக இருக்கின்றது.

மட்டக்களப்பில் இருக்கின்ற மக்கள் மாத்திரமல்ல வடக்கு- கிழக்கிலுள்ள தமிழ் மக்கள், மலையக மக்கள், மேல் மாகாண தமிழ் மக்கள் எல்லோரும் சஜித் பிரேமதாசாவிற்கு வாக்களிக்கத் திட்டமிட்டுள்ளனர். எனவே நாமும் நமது சமூகத்தை கருத்திற்கொண்டு அதற்கேற்றவாறு உரியவருக்கு வாக்களிக்க வேண்டும்.

அந்தவகையில் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக வருகின்றவேளையில் நாம் எதிர்பார்த்த  தீர்வுத்திட்டம் உட்பட பல விடயங்கள் எமக்கு கிடைக்கும். மேலும் அவரது தேர்தல்  விஞ்ஞாபனத்தில், மாகாணப் பகிர்வு பற்றிக் கூறப்பட்டது. இதனூடாக  மாகாணங்களுக்கிடையே அதிகாரங்களை பங்கீடு செய்யும் வாய்ப்புக்கள் உள்ளது. இது தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள நல்ல சமிஞ்ஞை -என்றார்.

No comments