கிளியில் பெண் வெட்டிக் கொலை

கிளிநொச்சி கந்தபுரம் பகுதியில் பெண்ணொருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
31 வயதான இளம் குடும்பப்பெண்ணே இவ்வாறு வெட்டுக்காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் குறித்த பகுதியை சேர்ந்த அன்ரன் ஜெராட் மேரி அகிலா என்ற 9 மாத குழந்தையின் தாயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண்ணின் கணவர் நேற்று வெளி மாவட்டம் ஒன்றுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் குறித்த குடும்ப பெண்ணிற்கு துணையாக முதியவர் ஒருவர் அங்கு பாதுகாப்பிற்காக தங்கியுள்ளார். அவரும் அதிகாலை 5.30 மணியளவில் அங்கிருந்து சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், அப்பெண்ணின் கணவர் காலை வீட்டுக்கு வந்தபோது மனைவி சடலமாக இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அக்கராயன் பொலிஸார், உயிரிழந்த பெண்ணின் கழுத்து மற்றும் முகத்தில் வெட்டு காயங்கள் காணப்படுவதாகவும் கூரிய ஆயுதம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலிலேயே அவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் காலை 6.30 மணிக்கு பின்னர் இடம்பெற்றிருக்கலாம் எனவும் குறித்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கணவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதணைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சட்ட வைத்திய அதிகாரியின் விசாரணை அறிக்கை மற்றும் தடயங்களை வைத்து மேலதிக விசாரணைகள் இடம்பெறவுள்ளன.
சம்பவத்துடன் தொடர்புடைய சூத்திரதாரியை விரைவில் கைது செய்ய விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

No comments