அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டிய காலமிது!


இலங்கையின் அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தமிழர்களுக்கு எந்த தீர்வையும் தராது என்பதே மீண்டும் மீண்டும் தமிழர்கள் உணர வேண்டிய உண்மையாக இருக்கிறது. – மே பதினேழு இயக்கம்
நடந்து முடிந்த இலங்கை அதிபருக்கான தேர்தலில் இனப்படுகொலையாளி கோத்தபாய ராஜபக்சே அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அதிபருக்காக போட்டியிட்ட சஜித் பிரேமதாசா மற்றும் கோத்தபாய ராஜபக்சே ஆகிய பிரதான இரு வேட்பாளர்களுமே தமிழர் தரப்பு கட்சிகள் வைத்த கோரிக்கைகளை மதிக்கவில்லை.
தமிழர்களை தனித்த தேசிய இனமாக அங்கீகரிப்பது, வடக்கு கிழக்கை இணைப்பது, ராணுவத்தை வெளியேற்றுவது, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி என எந்த கோரிக்கைகளையும் அந்த இரு வேட்பாளர்களும் மதித்திடவில்லை.
இரண்டு பேய்களில் எந்த பேய் மெதுவாக கொல்லும் பேய் என தேர்ந்தெடுக்கும் சூழலுக்கே தமிழர்கள் தள்ளப்பட்டனர். இருப்பினும் கோத்தபாய ராஜபக்சே வந்துவிடக் கூடாது என எண்ணி ஒட்டுமொத்தமாக பெரும்பான்மை தமிழர்கள் அந்த நபருக்கு எதிராக வாக்களித்த போதும், சிங்களர்களின் வாக்குகளை மட்டும் பெற்று கோத்தபாய ராஜபக்சே தமிழர்களுக்கு அதிபராகும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
இப்படிப்பட்ட ஆட்சி முறைக்குள் தமிழர்களுக்கு எப்படி நீதி கிடைக்கும்? சிங்களர்கள் தங்கள் இனவாத அரசியலை பாதுகாக்கக் கூடிய ஒரு நபரை தங்களுக்கு அதிபராக தேர்ந்தெடுத்து தமிழர்கள் மீதும் திணித்திருக்கிறார்கள். இதில் எங்கே இருக்கிறது நீதி? ஒன்றரை லட்சம் தமிழரின் மீதான இனப்படுகொலையின் முக்கிய குற்றவாளியை மீண்டும் அதிபராக அமர்த்தி விட்டு எந்த நல்லிணக்கத்தினையும், சம உரிமையினை தமிழர்களுக்கு அளிக்கப் போகிறது சர்வதேச சமூகம்?
நடந்து முடிந்திருப்பது சிங்களர்களுக்கான தேர்தல். தமிழர்களின் அரசியல் தீர்வுக்கும் இந்த தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தமிழர்கள் ஒரு சர்வாதிகார இனப்படுகொலையாளியை நேருக்கு நேராக சந்திக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதனை தேர்ந்தெடுப்பதில் தமிழர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறது இலங்கையின் இனவாத ஒற்றையாட்சி நடைமுறை. இனிமேலும் தமிழர்களுக்கான நீதிப் பொறிமுறையில் சர்வதேசம் மவுனம் காக்கக் கூடாது.
அமெரிக்காவும், இங்கிலாந்தும், இந்தியாவும் தமிழர் கடலினை ஆக்கிரமிக்க தமிழர்கள் பிரச்சினையை ஒரு பகடைக் காயாக பயன்படுத்தி வருகிறார்கள். ராஜபக்சேவாக இருந்தாலும், மைத்ரிபாலவாக இருந்தாலும், ரணிலாக இருந்தாலும், கோத்தபாயவாக இருந்தாலும், இலங்கையின் அதிபராக இருப்பவர், தான் சொல்வதை கேட்கக் கூடிய கையாளாக இருக்க வேண்டும் என்றே அமெரிக்கா விரும்புகிறது. அதற்காக நிகழக் கூடிய சூதாட்ட விளையாட்டுகள் தான் இந்த தேர்தல் நிகழ்வுகள். தங்களில் யார் அமெரிக்காவுக்கு சிறந்த அடிமை எனபதற்கான போட்டியே சிங்களப் பேரினவாத கட்சிகளுக்குள் நடந்து கொண்டிருக்கிறது.
அமெரிக்காவோடு சேர்த்து சீனாவின் அபிலாசைகளையும் நிறைவேற்றுவதில் யார் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பதே தந்திர விளையாட்டு. எந்த அதிகாரமும் இல்லாமல் நீதியை நோக்கி நிற்கிற தமிழர்கள் இந்த சூதாட்ட விளையாட்டிற்குள் சிதைந்து போகாமல், இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணைக் கோரிக்கையை முன்வைத்து சர்வதேச அளவில் நகர்வது மட்டுமே முக்கியமான நகர்வாக இருக்க முடியும்.
இனி வரும் காலங்கள் தமிழர் வரலாற்றின் முக்கியமான காலமாக இருக்கப் போகிறது. இந்த காலக்கட்டத்தில் நமது பாதையை நாமே தீர்மானிக்கப் போகிறோமா அல்லது வல்லரசுகள் தீர்மானிக்கப் போகிறதா என்பதே தமிழர்கள் முடிவெடுக்க வேண்டிய முக்கிய விடயம்.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கேட்கும் தாய்மார்களின் போராட்டம் 1000 நாட்களை கடந்திருக்கிறது. இதே போல நில ஆக்கிரமிப்புகளை விடுவிக்கக் கோரும் போராட்டமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சிங்கள ஆக்கிரமிப்பு ராணுவம் தமிழ் மண்ணை விட்டு வெளியேறவில்லை. சிங்களமயமாக்கல், பெளத்தமயமாக்கல் என்று கலாச்சார இன அழிப்பும் நடந்து கொண்டிருக்கிறது. இதையெல்லாம் எதிர்த்து தமிழீழம் போராடிக் கொண்டிருக்கிறது. ஆனால் சர்வதேச சமூகம் இவை எவற்றையும் கண்டுகொள்ளாமல் சிங்களப் பேரினவாத இனப்படுகொலை அரசினை பாராட்டிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் போராடுகிற தமிழீழ மக்களின் கோரிக்கைகளுடன் கைகோர்த்து, அவர்களின் போராட்டத்தினை வலுப்படுத்த உலகெங்கும் கொண்டு சேர்த்து இனப்படுகொலைக்கான நீதியினைக் கோருவதும், தமிழீழ விடுதலைக்கான சுய நிர்ணய உரிமையினை விட்டுத் தரமாட்டோம் என உலகுக்கு உரைப்பதுமே இந்த நேரத்தில் நமது முக்கியப் பணியாக இருக்கிறது.
அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, சீனா போன்ற அரசுகள் இலங்கை மற்றும் தமிழீழ விவகாரத்தின் அரசியல், ராணுவ தலையீட்டிலிருந்து வெளியேற வேண்டும். தமிழர் கடலிலிருந்து அன்னிய படைகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு, தமிழர் கடல் அமைதி பிராந்தியமாக அறிவிக்கப்பட வேண்டும். இவற்றினை ஓங்கி ஒலிப்பது உலகத் தமிழர்களின் இன்றைய அவசியத் தேவையாகும்.
தேர்தலுக்கு அப்பாற்பட்ட அரசியல் இயக்கத்தினை ஈழத்தமிழர்கள் கட்டியெழுப்ப வேண்டிய காலம் இது. தங்களை அரசியல் சக்தியாக ஒன்றுதிரட்டி தமது கோரிக்கைகளை முன்னக்ர்த்த தமக்கான தளத்தினை ஏற்படுத்திக்கொள்ளுதல் அவசியம் என்பதை இத்தேர்தல் உணர்த்துகிறது

No comments