சிலிண்டர்கள் இறக்குமதி; தட்டுப்பாடு நீங்கியது

எரிவாயு தட்டுப்பாடு இன்னும் இரண்டு நாட்களுக்குள் தீர்ந்துவிடும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
3,500 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றியபடி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மும்பையிலிருந்து சரக்குக் கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இதனையடுத்து இன்றைய நாள் முழுவதும் எரிவாயு சிலிண்டர் நிரப்பும் பணிகள் இடம்பெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் துறைமுகத்திலிருந்தே நாடு முழுவதுமுள்ள முகவர்களுக்கு விநியோகம் நடைபெறும் என தொழில்துறை மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக தெரிவித்துள்ளார்.
கடந்த மாத தொடக்கத்தில் சவுதி அரேபியாவிற்கு அண்மையில் செங்கடலில் ஈரானிய எண்ணெய் ராங்கர் ஒன்று தாக்குதலுக்கு உள்ளான பின்னர் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
அந்த சம்பவத்தின் பின்னர், அதிகமான தாக்குதல்களுக்கு பயந்து எரிவாயு ராங்கர்கள் இப்பகுதியைத் தவிர்த்தன என்றும் இதனால் கொழும்பை அடைவதில் தாமதம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.
கொழும்பு நோக்கி பயணித்த பல எரிவாயு ராங்கர்கள் மும்பைக்கு திருப்பி விடப்பட்டதோடு, துரதிர்ஷ்டவசமாக இந்திய கடற்கரையிலிருந்து அண்மையில் ஏற்பட்ட சூறாவளி நிலைமை காரணமாக அவர்களால் கொழும்புக்கு வரமுடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை அதிக விலையில் விற்பனை செய்த 37 முகவர்கள் மீது நுகர்வோர் விவகார ஆணையம் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இரண்டு எரிவாயு ராங்கர்கள் அடுத்த வாரம் கொழும்பு துறைமுகத்திற்கு வரவுள்ளதாகவும் அதன் பின்னர் முழு எரிவாயு விநியோகமும் இயல்பாக்கப்படும் என்றும் தொழில்துறை மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக தெரிவித்துள்ளார்.

No comments