அவரசமாக கூடுகின்றன தமிழ் தரப்புக்கள்?


ஜனாதிபதித் தேர்தலில், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்குவதற்கு, தமிழரசுக் கட்சி, ஏகமனதாகத் தீர்மானித்துள்ள நிலையில் ஏனைய கட்சிகளிடையே முரண்பாடான நிலை தோன்றியுள்ளது.

தமிழரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டம், வவுனியாவில் நேற்று திங்கட்கிழமை  தமிழரசுக் கட்சியின் தலைவர்  மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றிருந்தது.

இதன்போது, தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ஒன்றுகூடி ஆராய்ந்ததுடன், ஜனாதிபதித் தேர்தலில், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்துக்கு ஆதரவு வழங்குவது என்ற ஏகோபித்த முடிவை  எடுத்திருந்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான தமிழீழ விடுதலை இயக்க மற்றும் தமிழீழ மக்கள் விடுதலைக்கழக தலைமைகளுடன் கலந்தாலோசித்து, முடிவை அறிவிக்கும் அதிகாரத்தை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம், தமிழரசுக் கட்சி  கையளித்திருந்தது.

தமிழரசுக் கட்சியின் முடிவு தொடர்பாக யாழ்.பல்கலைக்கழக மாணவர்களது முயற்சியில் இணைந்திருந்த கட்சிகள் சீற்றங்கொண்டுள்ளன.

நாளை சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணி என்பவை   அவசரமாக சந்தித்து பேசவுள்ளன.

இதனிடையே டெலோவின் சிறிகாந்தா அணி நிபந்தனையற்ற ஆதரவை நிராகரித்துவிட்டது.ஆயினும் செல்வம் அடைக்கலநாதன் அணி மௌனம் காத்துவருகின்றது.

இன்னொருபுறம் தமிழீழ மக்கள் விடுதலைக்கழக தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனும் தமிழரசு நிலைப்பாட்டை ஆதரிக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. 

No comments