தமிழரசின் கோரிக்கைகளை சஜித் ஏற்றுவிட்டாராம்: பீரிஸ்

இலங்கை தமிழரசுக் கட்சி புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பதன் மூலம் தமிழ் கட்சிகளின் கோரிக்கைகளை அவர் ஏற்றுக்கொண்டுள்ளாரென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபய ராஜபக்ஷவிற்கு ஆதரவளிக்கின்ற 14 சிறு அரசியல் கட்சிகள் உள்ளடங்களாக பல்வேறு அமைப்புகளுடன் இன்று  (திங்கட்கிழமை) பொதுஜன பெரமுன புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழ் கட்சிகள் 13 அம்ச கோரிக்கைகளை முன்வைத்திருந்தன. நாட்டின் அரசியல் யாப்பில் இரண்டாம் சரத்தை நீக்கி ஒற்றையாட்சியை இல்லாது செய்தல், இராணுவத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துதல், வடக்கு கிழக்கு இணைப்பு, பயங்கரவாத தடைசட்டம் நீக்கப்படுதல் போன்ற கோரிக்கைகள் அதில் அடங்குகின்றன.
இது நாட்டுக்கு உகந்ததல்ல என்று தெரிவித்தே அதனை கோட்டாபய ராஜபக்ஷ நிராகரித்தார்.
ஆனால் தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதன் மூலம் அவர் அந்த கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டுள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது.
இதன்மூலம் அவர் வடக்கிற்கு ஒருமாதிரியும் தெற்கிற்கு ஒருமாதிரியும் நடந்துகொள்கிறார் என்பது புலப்படுகிறது” என குறிப்பிட்டார்.

No comments