தலைவரல்ல எவராலும் நடவடிக்கை எடுக்க முடியாது

சிலர் தங்களின் சுயநல அரசியல் தேவைகளுக்காக பக்கச்சார்பாக செயற்படுகின்றார்கள் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பாதுகாக்கும் அமைப்பின் மாநாடு நேற்று(செவ்வாய்கிழமை) சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்றது.
இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘நாடு அரசியல் ரீதியிலும், பொது மக்களின் வாழ்வியல் ரீதியிலும் தீர்மானங்களை முன்னெடுக்கும் தீர்க்கமாக தருணத்தில் தற்போது உள்ளது. இரண்டு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் வெளியிட்டுள்ள தேர்தல் கொள்கை பிரகடனத்தில் பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்ந்துள்ளேன்.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள தேர்தல் கொள்கை பிரகடனத்தில் மனித உரிமைகளுக்கும், மக்களின் சுதந்திரத்திற்கும் பாதுகாப்பு வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளமை பெரும் நகைப்பிற்குரியதாக காணப்படுகின்றது.
10 வருட கால குடும்ப ஆட்சியில் மனித உரிமைகளும், மக்களின் பாதுகாப்பும் எவ்வாறு காணப்பட்டது என்பதை நாட்டு மக்கள் இன்றும் மறக்கவில்லை.
சிலர் தங்களிக் சுய நல அரசியல் தேவைகளுக்காக இன்று பக்கச்சார்பாக செயற்படுகின்றார்கள். கோட்டாபய ராஜபக்ஷ எவ்வாறு மனித உரிமைகளையும், பொது மக்களின் சுதந்திரத்தினையும் பாதுகாப்பார் என்பதை முறையாக குறிப்பிட வேண்டும். தேசிய நிதி மோசடிக்கும், முறையற்ற அரச நிர்வாகத்திற்கும் கடந்த அரசாங்கமே துணைபோயுள்ளது.
எனக்கும் இந்த மாநாட்டில் கலந்துக் கொண்ட சுதந்திர கட்சியின் உறுப்பினர்களுக்கும் எதிராக சுதந்திர கட்சியின் தலைவர் அல்ல பொதுச்செயலாளருக்கு கூட ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது.
ஒருவேளை, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமாயின் அதனை சட்டத்தின் ஊடாகவே வெற்றிக் கொள்வேன் ஒருபோதும் குறுக்கு வழியில் செல்லமாட்டேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

No comments