டெல்லி காற்று மாசு யார் காரணம் ? இதற்கு என்ன தீர்வு?

காற்று மாசுப்பாட்டினால் இந்தியாவில் 2017ம் ஆண்டு மட்டும் 12.4 லட்சம் பேர் உயிர் இழந்திருக்கிறார்கள் என்று “State of Global Air 2019” ஆய்வறிக்கை கூறுகிறது. குறிப்பாக டெல்லியில் மட்டும் ஆண்டிற்கு 10,500 பேர் காற்று மாசுபாட்டால் இறக்கிறார்கள். மூன்று நிமிடத்திற்கு ஒரு குழந்தை நச்சு காற்றை சுவாசிப்பதால் இந்தியாவில் இறக்கிறது என்று “Global Burden of disease 2017” அறிக்கை குறிப்பிடுகிறது.

காற்றின் தரத்தினை பொருத்தவரைக்கும் AQI (Air Quality Index) என சொல்லப்படும் காற்றின் தர அளவுகோல் 0-50 Good, 51-100 Moderate, 101-150 Unhealthy for sensitive people, 151-200 Unhealthy for all, 201-300 Very Unhealthy, 300+ Hazardous(அபாயகரமானது) என தர வரிசையில் பிரிக்கபட்டிருக்கிறது.

கடந்த ஞாயிறு 03.10.2019 அன்று மாலை 4 மணிக்கு டெல்லியில் பதிவாகிய காற்றின் தரம் மிகவும் அபாயகரமான 495 AQI (24Hrs avg) ஐ தொட்டிருக்கிறது. (2016ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி பதிவாகிய மோசமான AQI (Air Quality Index) க்கு பிறகு இதுவே அதிகபட்சம்).
இந்த அளவிற்கு டெல்லியின் காற்று மாசடைந்திருப்பதற்கு என்ன காரணம் ?
பொதுவாக ஒரு இடத்தின் காற்றின் தரம் அபாயகரமாக மாறி அது அந்த பகுதியிலே
தங்கிவிடுவதற்கான முக்கிய காரணம்.

1. அந்த இடத்திலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் இருந்து வெளிவரக்கூடிய பல்வேறு வகையான Pollutants

2. அந்த பகுதியினுடைய தட்ப வெட்பம் மற்றும் பூலோக அமைப்பு.
இவை ரெண்டும் தான் டெல்லி எப்பொழுதும் மாசடைந்து காணப்படுவதற்கான முக்கிய காரணிகள்.

குறிப்பாக அக்டோபர் இறுதி முதல் நவம்பர் இடையிலான காலகட்டத்தில் டெல்லி காற்று மாசு மிகவும் அதிகமாக இருப்பதற்கான

முக்கிய காரணங்கள் (Main source of pollutants):

1. வாகனப் புகை

2. குப்பைகளை எரிப்பது

3. ஹரியானா, பஞ்சாப், உத்தரபிரதேச விவசாயிகள் வைக்கோலை எரிப்பது

4. கட்டுமானப் பணிகளில் இருந்து வரும் மாசு

5. தீபாவளி பட்டாசுகள்

6. சாலைகளின் தங்கி இருக்கும் தூசி துகள்கள்

7. தொழிற்சாலைகளின் புகைப்போக்கியில் இருந்து வெளிவரும் புகை

8. அனல் மின்நிலையங்களில் இருந்து வெளியேறும் நச்சு புகை

9. Fly Ash மற்றும் கல்குவாரி யில் இருந்து வெளியேறும் தூசி துகள்கள்

10. டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டரப்பகுதிகளில் ஏற்படும் நீண்டநேர தொடர் மின்வெட்டுகளை சமாளிப்பதற்காக தாராளமாக பயன்படுத்தப்படும் Diesel Generator களில் இருந்து வெளியேறும் புகை.

இப்படி இத்தனை காரணிகளும் சேர்ந்து தான் இந்த 494 AQI என்ற அபாயகரமான எண்ணிகையை டெல்லி தொட்டிருக்கிறது என்றாலும் மொத்த பழியும் விவசாயிகளின் மீது போடப்படுகிறது. சற்றும் கூசாமல் ஊடகங்களும் அரசியல் வாதிகளும் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேச விவசாயிகள் தங்கள் வயலில் வைகோல்களை எரிப்பது தான் டெல்லி ஸ்தம்பித்து இருப்பதற்கு இது தான் ஓரே காரணம் போல் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். உண்மையில் தற்பொழுது டெல்லி காற்று மாசடைந்திருப்பதில் 35% மாசிற்கான காரணம் விவசாயிகள் வைக்கோலை எரிப்பது என்று அரசாங்க புள்ளிவிவரம் சொல்லுகிறது. அப்படியே 35% காரணமாக விவசாயிகள் இருந்தாலும் ஏன் மீதமுள்ள 65% காரணங்களை பற்றி பேச மறுக்கிறார்கள் என்பது முக்கியமான கேள்வி?.

விவசாயிகள் தீ வைப்பது முக்கியமான சூழலியல் கேடு தான் என்றாலும் அவர்களையும் நாம் முழுமையாக குறை சொல்லிவிட முடியாது. இதற்கு முன் இத்தனை ஆண்டுகாலம் இயற்கை முறையில் விவசாயம் செய்து வந்த அவர்கள் வைக்கோலை மாட்டிற்கு தீவனமாகவும் நிலத்திற்கு உரமாகவும் பயன்படுத்தி வந்தனர் ஆனால் பசுமை புரட்சி என்ற பெயரில் மாடுகளுக்கு பதில் Tractor களையும், வைக்கோல் உரத்திற்கு பதிலாக ரசாயன உரங்களையும் அரசாங்கம் கொடுத்து பழக்கியபின்னர் பாவம் அவர்களுக்கு வைக்கோலை என்ன செய்வதென்று தெரியவில்லை.

வருடத்திற்கு இரண்டு முறை (May-June மற்றும் Oct-Nov)  மட்டுமே விவசாயிகள் வைகோலுக்கு தீ வைக்கிறார்கள். அதுவும் கோடை மாதங்களான may-june இல் தான் அதிகபட்சமாக 77% தீயும், Oct-Nov இல் 23% தீயும் வைக்கிறார்கள். (கோடை காலத்தில் பலத்த காற்றடிக்கது என்பதானாலும், AQI அந்த அளவிற்கு மோசமான நிலைக்கு போகாது என்பதனால் அப்பொழுது வைக்கும் தீ டெல்லி வாசிகளுக்கு பிரச்சனையாக இல்லை).
இதில் ஒரு விடையத்தை நாம் முக்கியமாக புரிந்து கொள்ள வேண்டும் டெல்லி காற்று மாசு என்பது குறிப்பிட்ட காலத்தில் ஏற்படும் பிரச்சனை (Seasonal Issue) இல்லை. ஆண்டு முழுவதும் டெல்லி காற்று மோசமாகவும் மிக மோசமாகவும் தான் இருக்கிறது. Oct-Nov இல் அது அபாயகரமாக மாறும்போது மட்டும் ஊடகங்கள் பெரிதாக பேசுகிறது, நீதிமன்றங்கள் தாங்களாகவே முன்வந்து பரிந்துரைகளையும் கட்டளைகளையும் விதிக்கிறது, அரசும் உடனடி தற்காலிக நடவடிக்கை எடுத்து மக்களை திருப்தி படுத்துகிறது என்றால் உண்மையில் பிரச்சனையை எங்கிருக்கிறது என்று ஆராய வேண்டி இருக்கிறது.

ஆம் பிரச்சனை பூதாகரமாக மாறும்பொழுது அரசாங்கம் தற்காலிக தீர்வுகளை (காற்றின் தரத்தை AQI 450+ இல் இருந்தது AQI 250+ வரை குறைப்பதற்கான) வழிமுறைகளை முன்வைக்கிறதே தவிர நிரந்தரமாக அனைவரும் சுவாசிக்க கூடிய அளவிற்கு காற்றின் தரத்தை உயர்த்துவதற்கான நிரந்திர தீர்வினை முன்வைப்பதில்லை என்பதே குற்றச்சாட்டு.
இது என்னுடைய தனிப்பட்ட குற்றச்சாட்டு மட்டும் இல்லை, நேற்று 04/11/2019 அன்று இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பின் வருமாறு கூறி இருக்கிறது..

“People are dying and it cannot happen in a civilized society”, “Every time we are passing orders on current issue, we have to pass orders for long term measures”. – Supreme Court

உச்ச நீதிமன்றத்தின் இந்த வரிகளை மிக முக்கியமானதாக பார்க்கிறேன்.
டெல்லி காற்று மாசை குறைப்பதற்காக தற்பொழுது அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கைகளை தெரிந்துகொள்வதின் மூலம் உச்ச நீதிமன்றத்தின் இந்த வரிகளின் முக்கியத்துவத்தை நாம் புரிந்துகொள்ள முடியும்.

அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கைகள்:

1. 10 பேர் கொண்ட GRAP (Graded Response Action Plan) குழுவின் பரிந்துரையின் படி அக்டோபர் 26 முதல் அக்டோபர் 30 வரை கட்டுமான பணிகளுக்கு டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தடை விதிப்பது.

2. மத்திய மாசு கட்டுபாட்டு வாரியத்தின் பரிந்துரையின் பேரில் அனல் மின் நிலையங்கள் மற்றும் நிலக்கரி உபயோகிக்கும் தொழிற்சாலைகளை ஒரு வாரத்திற்கு மூடுவது.

3. குழாய் மூலம் இயற்கை எரி வாயுவை பயன்படுத்தாத தொழிற்சாலைகளை தற்காலிகமாக அக்டோபர் 26 முதல் அக்டோபர் 30 வரை மூடுவது.

4. நவம்பர் 1 முதல் நவம்பர் 15 வரை 15 நாட்கள் மத்திய மாசு கட்டுபாட்டு வாரியத்தின் கண்காணிப்பில் மாசு உண்டுப்பண்ணும் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை தீவிரமாக கண்காணிப்பது.

5. Delhi Dusk Action Plan என்ற புதிய திட்டத்தின் மூலம் கட்டுமான நிறுவனங்களை தீவிரமாக கண்காணிப்பது.

6. சாலையோர தூசுகளை மட்டுப்படுத்துவதற்கு Water Sprinklers கொண்டு \தண்ணீரை சாலைகளில் தெளிப்பது.

7. பள்ளி குழந்தைகளுக்கு 5மில்லியன் N95 Mask களை இலவசமாக தருவது.

மற்றும் நீண்ட கால திட்டமாக:

1. வாகன புகையை குறைப்பதற்காக மீண்டும் Odd-Even (ஒற்றைபடை எண்களில் முடியும் நம்பர் பிளேட்கள் கொண்ட கார்கள் ஒரு நாளிலும் இரட்டைபடை எண்களில் முடியும் நம்பர் பிளேட்கள் கொண்ட கார்கள் அடுத்த நாளிலும் சாலைகளில் ஓடும்) திட்டத்தை அமல்படுத்துவது.

2. நெருப்பு மூட்டும் விவசாயிகளின் குத்தகை நிலத்தை பிடுங்குவது, அபராதம் விதிப்பது.

3. பஞ்சாப் மற்றும் ஹரியான பகுதிகளில் உள்ள 27 லட்சம் விவசாயிகளுக்கு வைக்கோலை எரிக்காமல் இருப்பதற்கான 27லட்சம் மாற்று கருவியினை தருவது.

போன்ற திட்டங்களையும் விதிமுறைகளையும் அறிவித்திருக்கிறது அரசாங்கம்.
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஏற்கனவே எரியூட்டியதற்காக நூற்றுக்கணக்கான விவசாயிகளின் மீது முதல் குற்ற பத்திரிக்கையும் (FIR),  1000க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு அபராதமும் விதித்திருக்கிறார்கள். 35% மாசுக்கு காரணமான விவசாயிகள் மீது நடவடிக்கைகள் எடுத்த அரசாங்கங்கள் 65% மாசிற்கு காரணமான மேல்தட்டு மக்கள் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்க வில்லை.
இந்த புள்ளியில் இது சூழலியல் பிரச்சனை மட்டும் இல்லை இது ஒரு வர்க பிரச்சனை என்பதையும் நமக்கு நினைவூட்டுகிறது.
கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்க் அவரின் ட்விட்டர் பக்கத்தில் அபாயகரமான காற்று மாசு காரணமாக தான் குடும்பத்தினருடன் டெல்லியை விட்டு வெளியேறுகிறேன் என்றும். கிரிக்கெட் வீரார்கள் யுவராஜ் சிங்க் மற்றும் ஆஷிஷ் நேஹரா ஆகியோரும் தங்கள் உடல் நலனை மனதில் கொண்டு டெல்லியை விட்டு தங்கள் வெளியேறுவதாக பதிவிட்டிருக்கின்றனர்.
வசதி படைத்தவர்களுக்கு தற்காலிகமாக டெல்லியை விட்டு வெளியேறவும், AC கார்களில் புகை பாதிக்காமல் பயணம் செய்யவும், வீடுகளில் Hitech AIR Purifier வாங்கி வைத்துக்கொள்ளவும், காற்று மாசின் அபாயத்தில் இருந்து தங்களை பெருமளவு தற்காத்துக்கொள்ளவும் அனைத்து வசதியும் விழிப்புணர்வும் உண்டு.
ஆனால் வாரம் ஒரு முறை 200 ருபாய் கொடுத்து N95 , N99 Mask கள் வாங்கி அணியும் வாய்ப்பில்லாத விளிம்பு நிலை மக்களின் நிலை கொடுமையானது.
தாங்கள் செய்த குறைந்த பட்ச தவறுகளுக்காக அதிகபட்ச தண்டனையை அனுபவிக்கிறார்கள்.
காற்று மாசுப்பாட்டினால் வட இந்தியாவில் அந்த காற்றை சுவாசிக்கும் மக்களின் மொத்த ஆயுள் காலத்தில் 7 ஆண்டுகள் குறையும் என்று சிக்காகோ பல்கலைகழகத்தின் Energy Policy பிரிவின் ஆய்வு சொல்கிறது. கங்கை சமவெளி பகுதி இந்தியாவில் மிக அடர்த்தியாக மக்கள் (40% மக்கள் தொகை அதாவது 1.3 பில்லியன் மக்கள்) வாழும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

சரி நாம் திரும்ப உச்ச நீதிமன்றம் சொன்ன அந்த வாசகத்திற்கு வருவோம்
”, “Every time we are passing orders on current issue, we have to pass orders for long term measures”. – Supreme Court.
நீல வானத்தை காண வழிவகை செய்வோம் என்று தேர்தல் பிரச்சாரம் செய்த டெல்லி அரசாங்கமும் , மத்திய அரசாங்கமும் டெல்லி காற்று மாசை ஒரு ஒருமித்த பிரச்சனையாக (சீரற்ற அதிகப்படியான நகரமயமாக்களின் பிரச்சனையாக) அணுகி அதை குறைப்பதற்காண நீண்டகால திட்டத்தினை முன்வைக்காமல் ஒவ்வொரு பிரச்சனையையும் தனித்தனியாக பிரித்து பார்த்து தற்காலிகமாக அதை மட்டுப்படுதுவதற்கான நடவடிக்கைகளையே இன்றும் நடைமுறை படுத்தி வருகிறது.

உதாரணத்திற்கு,
1. வாகன பெருக்கம் அதனினால் ஏற்படும் புகை :  இதற்கு அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு ODD-EVEN திட்டம். அனால் உண்மையில் இது ஒரு தோல்வியுற்ற திட்டம். அரசை ஏமாற்றி நிறைய மக்கள் இரண்டு நம்பர் பிளேட்டுகள் செய்து வைத்து கொண்டு ஒரே வாகனத்தை பயன்படுத்தினர். ODD Number plate காரை even நாட்களில் பயன்படுத்த முடியாதவர்கள் Taxi புக் செய்து மற்றும் Auto விழும் அலுவலகத்திற்கு சென்றார்கள், பலரும் தங்களுடைய இருசக்கர வாகனத்தை பயன்படுத்தினார்கள்.  Odd-Even திட்டம் அமலில் இருந்த பல நாட்களில் இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களில் இருந்து வந்த புகை சாதாரண நாட்களில் வரும் வாகனப் புகையை விட அதிகமாக இருந்ததாகவும் தெரியவருகிறது. ODD-EVEN திட்டம் வாகன புகைக்கு தீர்வாகாது.
தீர்வு: பொது போக்குவரத்தை பயன்படுத்தி பெருவாரியான மக்களை ஊக்குவிக்க வேண்டும். டெல்லி யை பொறுத்த வரைக்கும் தமிழ்நாட்டை போல் அங்கு Last mile Connectivity என்பது இல்லை. ஒரு இடத்திற்கு போக வேண்டும் என்று Metro அல்லது அரசு பேருந்தில் பயணித்தாலும் அந்த குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல கடைசி 2-3km கள் ஆட்டோ வோ தனியார் டாக்சியோ தான் பிடிக்க வேண்டும். மக்கள் சொந்த வாகனத்தில் செல்ல இது ஒரு முக்கிய காரணம். Last mile connectivity ஐ பொது போக்குவரத்தில் சாத்தியப்படுத்த வேண்டும். பாதசாரிகள் இடையூறு இல்லாமல் நடந்து செல்ல நடை பாதைகளை சாலைகளின் இரு புறமும் அமைத்து பராமரிக்க வேண்டும், சைக்கில் ஓட்டுபவர்களுக்கென தனி வழித்தடம் அமைக்க வேண்டும், சாலைகளை நவீனப்படுத்த வேண்டும், பொது போக்குவரத்து கட்டணங்களை குறைக்க வேண்டும், அதிக அளவில் பேருந்துகளை இயக்க வேண்டும். இது போன்ற ஏற்பாடுகள் செய்வதின் மூலம் மக்களின் சொந்த வாகன பயன்பாட்டினை குறைக்கலாம்.

2. அனல் மின்சாரங்களில் இருந்து வரும் காற்று மாசு:
ஒரு 500MW அனல் மின் நிலையத்தில் இருந்து மட்டும் நாள் ஒன்றுக்கு 105டன் SO2 , 24டன் NO2,  2.5டன் Particulate Matter மற்றும் 3500 சாம்பல் ஆகிய காற்று மாசுகள் காற்றில் வெளியேறுகிறது. Delhi NCR பகுதிகளில் மட்டும் மொத்தமாக 13.2GW மின்சாரம் உற்பத்தி செய்ய கூடிய 40க்கும் மேற்பட்ட அனல் மின் நிலையங்கள் செயல் பாட்டில் உள்ளன. இவை அனைத்தையும் மூடிவிட்டு Decentralized Renewable Energy ஐ நோக்கி டெல்லி அரசாங்கம் நகர்வது காற்று மாசை குறைக்க பெருமளவில் உதவும்.

3. குப்பைகளை எரிப்பது :
இந்தியா முழவதிலும் திடக்கழிவு மேலாண்மை என்று துறைக்கு பெயர் மட்டும் இருக்கிறதே தவிர மேலாண்மை என்று எதுவும் நடக்கவில்லை. திடக்கழிவை பிரித்தெடுக்கும் (Collection-Segregation) முறையை கடின முயற்சி செய்து டெல்லியில் அமல்படுத்துவத்தின் மூலமும் பிரித்தெடுத்தவைகளை Reuse-Recycle செய்வதன் மூலமும் குப்பைகளை எரிப்பதை பெரியளவிற்கு குறைக்கலாம்.

4. விவசாயிகள் எரிக்கும் விவசாய கழிவுகள்:
விவசாயிகள் விவசாய கழிவுகளை அகற்ற 20 கிராமத்திற்கு ஒன்று என்ற அளவில் அதை மாற்று பயன்பாடிற்காக  Processing அல்லது  செய்யும் நிலையத்தை அமைக்கலாம்.

5. நகர திட்டமிடுதல் (City Planning) :
பெரிய நகரகங்களுக்கும் அதன் துணை நகரங்களுக்கும் நகர திட்டமிடுதால் மிக முக்கியமான ஒன்று. வளர்ந்த நாடுகளில் நகரத்தை திட்டமிடும் போதே அதன் Metrological Conditions, Geographical Conditions, expected Pollution, Traffic, Population ஆகியவற்றை கணக்கில் கொண்டு அந்த நகரத்தை உருவாக்குகிறார்கள். இதனுடன் சேர்த்து Climate Change உம் ஒரு காரணியாக நாம் வைத்துக்கொண்டு இந்தியாவில் பெரிய நகரங்களையும்  அதன் துணை நகரங்களையும் திட்டமிட்டு மாற்றி அமைக்க வேண்டும்.

6. Zone Classification:
சீரான நகர வளர்ச்சிக்கு Zoning Law மிக முக்கியம். Residential , Industrial, Commercial, Eco Sensitive Zones என பிரித்து Zone Classification உடன் டெல்லி போன்ற நகரங்களை சீர் படுத்த வேண்டும். இது பெயர் அளவில் நடைமுறையில் இருந்தாலும் பல சமயங்களில் விதிகள் தளரத்தப்பட்டு மீறப்படுகிறது. இதை டெல்லி மற்றும் அதன் துணை நகரங்களில் இன்னும் சரியாக நடைமுறை படுத்த வேண்டும்.

7. பசுமை பூங்கா (Lung Spaces):
டெல்லி நகரத்தின் அனைத்து பகுதிகளில் ஆங்காங்கே பசுமை பூங்காக்களும் தோட்டங்களும் அமைப்பது மூலமாக அவை நுரையீரலாக செயல்பட்டு காற்று மாசை குறைக்க உதவும்.

இது போன்ற பிரச்சனையின் மையப்புள்ளியை அணுகக்கூடிய தொலைநோக்கு கொண்ட இதை போன்ற இன்னும் பல  நீண்டகால திட்டங்களே டெல்லி காற்று மாசை குறைத்து இந்தியாவின் தலை நகரை மக்கள் வாழ தகுந்த இடமாக மாற்ற உதவும்.

-வீ.பிரபாகரன்
பூவுலகின் நண்பர்கள்

No comments