ஒருபோது தேர்தலை புறக்கணிக்கச் சொல்ல மாட்டோம்!

தேர்தலை பகிஷ்கரிக்குமாறு எக்காரணம் கொண்டும் மக்களிடம் கூறமாட்டோம் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று கட்சியாக இருந்த நாங்கள் ஒரு தீர்மானத்தினை எடுப்பதற்காக ஐந்து கட்சிகளாக மாறியுள்ளோம்.
தற்போது இணைந்துள்ள கட்சிகளும் முன்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்துசென்ற கட்சிகளாகவே உள்ளன. தமிழ் மக்களின் நலனை மையமாகக்கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.
வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். எங்களது மண்ணையும் உரிமையினையும் சூறையாடுவதற்கு எந்த வேட்பாளருக்கும் இடமளிக்கமாட்டோம். அதேபோன்று விரைவில் ஐந்து கட்சிகளும் இணைந்து யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்பதை மக்களுக்கு கூறும்.
கடந்த காலத்தில் ஆட்சியாளர்களை கொண்டுவருவதற்கு மிகவும் கஸ்டப்பட்டோம்.அதன் பலனை நாங்கள் அனுபவிக்கவில்லை. ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக முடிவெடுக்கும்போது பல விடயங்களை ஆராய்ந்து முடிவுகளை எடுப்போம். அதனை மக்களுக்கு தெளிவுபடுத்துவோம்” என மேலும் தெரிவித்தார்.

No comments