புலிகள் தலையெடுத்து விட்டதாக கூற இயலாது- மஹேஸ்

தேர்தல் நெருங்கும் போது விடுதலைப் புலிகள் தோற்றம் பெறுகிறார்கள் என்று அண்மைய சம்பவங்களை வைத்து அதிகமாக தோற்றுவிக்கப்படலாம் என ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் கிளிநொச்சியில் ஆயுதங்கள் மீட்கப்பட்டமை, விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையோர் என்ற குற்றச்சாட்டில் மலேசியாவில் ஏழு பேர் கைது செய்யப்பட்டமை போன்ற சம்பவங்கள், சிங்கள மக்கள் மத்தியில் விடுதலைப் புலிகள் மீண்டும் தலையெடுக்கின்றனர் என்ற அச்சத்தை ஏற்படுத்தி அதன் மூலம் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் முயற்சியா? என மகேஷ் சேனநாயக்கவிடம் கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்துள்ள அவர், “எந்தவொரு பயங்கரவாத அமைப்பையும் ஒரே தடவையில் தடுத்து விட முடியாது. இலங்கையில் மாத்திரமல்லாது உலகின் பல நாடுகளிலும் இவ்வாறான அமைப்புக்கள் இருக்கின்றன.
இதேவேளை, விடுதலைப் புலிகளுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்ததா என்று சிந்திக்க வேண்டும். யுத்தத்தின் பின்னர் இரு அரசாங்கங்கள் இருந்தன. அவற்றினால் இவர்களுக்கு தீர்வு வழங்கப்பட்டதா? புலிகள் இயக்கத்தில் செயற்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு தீர்வு வழங்கப்பட்டதா ? அவர்களது வாழ்வாதாரம் சீர்படுத்தப்பட்டுள்ளதா ? என்ற கேள்விகளுக்கு பதில் இல்லை.
நாம் இராணுவத்தில் இருந்தததால் அவர்களுடன் பணிபுரிந்திருக்கின்றோம். ஆனால் அரசாங்கம் அவ்வாறு செயற்படவில்லை. அவர்கள் மீண்டும் தலையெடுத்து விட்டார்கள் என்று கூற முடியாது. ஆனால் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக வரக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன.
சில சந்தர்ப்பங்களில் இவ்வாறான பிரச்சினைகள் ஏன் ஏற்படுகின்ற என்று சிந்திக்க வேண்டும். வெளிநாடுகளில் இருக்கின்ற புலம் பெயர் தமிழர்கள் இவ்வாறு பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். அவ்வாறில்லை என்றால் அவர்களால் அங்கு வாழ முடியாது. இவ்வாறான அமைப்புக்களும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. எனவே யார் இதனைச் செய்கிறார்கள் என்று நாம் தான் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.
தேர்தல் நெருங்கும் போது இவ்வாறான பிரச்சினைகள் அதிகமாகத் தோற்றுவிக்கப்படலாம். இவ்வாறான பிரச்சினைகளை தோற்றுவித்து தேசிய பாதுகாப்பு பற்றி பேசுவார்கள்” என்று அவர் தெரிவித்தார்.

No comments