பிள்ளைகளை கிணற்றில் தள்ளி கொண்றமைக்கு கவலை

வவுனியா, பட்டிக்குடியிருப்பில் இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாத துன்பியல் சம்பவமென அம்மாவட்ட நகரசபையின் தலைவர் இ.கௌதமன் தெரிவித்துள்ளார்.

வவுனியா- நெடுங்கேணி, பட்டிக்குடியிருப்பில் தாயொருவர் தனது இரு பிள்ளைகளை கிணற்றில் எறிந்து, தானும் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் இரு பிள்ளைகளும் இறந்துள்ளமை தொடர்பாக அனுதாபம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “பிள்ளைகள் எமது நாட்டின் சொத்துக்கள். எதுவும் அறியாத பிள்ளைகளை துன்புறுத்துவதும் அவர்களை தமது எண்ணத்திற்கு ஏற்றவகையில் முடிவெடுத்து அழிக்க நினைப்பதும் கொலைக்கு சமமான செயற்பாடாகும்.

நெடுங்கேணியில் இன்று இடம்பெற்ற சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாத கவலையை தருகின்றது. கணவனை விபத்தில் பறிகொடுத்த தாய்க்கு மன ரீதியான அழுத்தம் இருந்திருக்கலாம். எனினும் இவ்வாறான முடிவினை எடுப்பது ஏற்றுக்கொள்ளமுடியாத விடயம்.

அத்துடன் எமது சமூகத்தை ஆட்டிப்படைக்கும் நுண்நிதி நிறுவனங்களின் செயற்பாடுகளாலும் கடந்த காலங்களில் இவ்வாறான நிலைமை ஏற்பட்டிருந்தது.

ஆனாலும்  இவ்வாறான முட்டாள் தனமாக செயற்பாடுகளினால் குழந்தைகளை பலியாக்குபவர்கள் கொலையாளிகள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இன்று எம் சமூகம் யுத்தத்திற்கு முன்னராகவும் அதன் பின்னரும் பல்வேறு சந்தர்ப்பத்தில் தமது பிள்ளைகளை இழந்து வீதியோரங்களில் பல ஆண்டுகளாக போராட்டங்களை நடத்தி வருகின்ற நிலையில் பெற்ற பிள்ளைகளை கொலை செய்துள்ளமை விசனத்தனமானது.

பல குடும்பங்கள் இன்று பிள்ளைகள் இல்லை என ஏங்கியிருக்கும் நிலையில் தன்னால் பிள்ளைகளை பராமரிக்க முடியாது விட்டால் அவர்களுக்கு தத்துகொடுத்திருக்கலாம். எனவே அவ்வாறு செய்யாத தாய் தனது பிள்ளைகளை கொலை செய்துள்ளமை கண்டிக்கத்தக்கது.

எமது இனத்தின் வளமான எதிர்காலங்களை இவ்வாறு அழிப்பதனை மனித சமூகம் ஏற்றுக்கொள்ளாது. ஆகவே இரு பிள்ளைகளின் உயிரை பறித்த பிள்ளைகளின் தாயாருக்கு சட்டம் தகுந்த தண்டனையை வழங்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

No comments