சுர்ஜித்-ன் மரணத்தை வெறுமனே அழுது மட்டும் கடந்து விடாதீர்கள்!- விவேகானந்தன் ராம்தாஸ்

அழுது கடப்பதே நமது பலவீனம்! மரணத்தில் அரசியல் செய்யாதே எனச் சொல்லும் வெற்றுக் குரல்களை புறந்தள்ளுங்கள். இது அரசியல் ரீதியாக விவாதமாக்கப்பட வேண்டிய மரணம்.

நமது RIP status-களை விட, சுர்ஜித்-ன் உயிரைக் காக்க முடியாத தொழில்நுட்ப வளர்ச்சியின் பின்னுள்ள அரசியலையும், வணிகத்தையும் கேள்விப் பொருளாக்குவதே சுர்ஜித்-க்கு நாம் செய்யும் இறுதி மரியாதை.

நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் உலகிலேயே அதிக பணத்தை ராணுவத்திற்கு செலவிடும் 4 வது நாடு இந்தியா! ஆனால் மக்களின் பாதுகாப்பிற்காக செலவிடப்படும் பணம் என்ன என்ற கேள்வி எழுப்பப்பட வேண்டும்.

சுர்ஜித் மரணம், ஒக்கி புயல், கஜா புயல் என அனைத்து மரணங்களும், வளர்ச்சி என்பது யாருக்கானது என்பது குறித்த  பல்வேறு படிப்பினைகளை நமக்கு கற்றுத் தந்திருக்கின்றன.

விடுதலைப்புலிகள் எனும் போராளி அமைப்பின் கப்பல்களை ஏராளமான நாட்டிகல் மைல் தொலைவில் துல்லியமாக காட்ட முடிந்த கடற்படையால், ஒக்கி புயலின் போது மீனவர்களை ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை என்ற கேள்வியில் என்ன தவறு இருக்கிறது.

விக்ரம் லேண்டரையும், செயற்கைக் கோள்கைகளையும், சுர்ஜித்தையும் இணைத்து எழுப்பப்படும் கேள்விகளில் அத்தனை நியாயம் இருக்கவே செய்கிறது.

வல்லரசு இந்தியாவினால், டிஜிட்டல் இந்தியாவினால் போர்வெல்லுக்குள் விழுந்த குழந்தையைக் காக்கும் ரோபோ-வினையும், மனிதக் கழிவை மனிதனே அள்ளும் இழிவைப் போக்கும் இயந்திரத்தையும் ஏன் கொண்டுவர முடியவில்லை என்ற கேள்வி முக்கியமானதுதானே.

ஆழ்துளைக் குழாயிலிருந்து குழந்தையைக் காக்கும் தொழில்நுட்பம் மட்டும் வியாபாரம் சார்ந்த ஒன்றாக இருந்திருந்தால், அந்த இயந்திரம் எப்போதோ வடிவமைக்கப்பட்டு, அதில் பல அப்டேட்கள் இந்நேரம் வந்திருக்கும். ஏழை மக்களின் உயிர்தானே என்பதால் தான் அத்தொழில்நுட்பத்தினைக் கொண்டு வருவதில் இத்தனை அலட்சியம்.

ராணுவத்தை நோக்கியோ, வளர்ச்சி என்ற பெயரில் திணிக்கப்படும் தொழில்நுட்பத்தை நோக்கியோ கேள்வி எழுப்புவது தேச விரோதம் என்று கட்டமைக்கப்பட்டுள்ள புனித பிம்பத்திலிருந்து வெளியே வாருங்கள்.

கேள்வி எழுப்புதல் என்பது மட்டுமே ஒரு நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்கும் மிகப்பெரும் ஆயுதம். இயங்காத கட்டமைப்புகளை இயங்கச் செய்யும் வினையூக்கி என்பது கேள்விகள் மட்டுமே.

கேள்விகள் எத்தகைய சிறியதாக இருந்தாலும் எழுப்பிப் பழகுவோம். மக்களுக்கு பதில் சொல்வதற்கு அரசுகள் பழகட்டும். அதுதானே மக்களாட்சி!

No comments