ஆழ்துளை கிணறுகளை மழை நீர் சேகரிப்பாக மாற்றும் புது நடவடிக்கைகு அழைப்பு!

பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகளை மழை நீர் சேகரிப்பாக மாற்றுங்கள் என்று  குடிநீர் வடிகால் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அதுபோல, குடிநீர் வடிகால் வாரியத்தால் போடப்பட்டு பயன்படாத ஆழ்துளை கிணறுகளை மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் மகேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார்.

திருச்சி மணப்பறை அருகே குழந்தை சுர்ஜித் பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகள், திறந்தவெளி கிணறுகளை உடனே மூட தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது.
இதுதொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதி மன்றமும், ”அரசின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் உயிர்பலி வேண்டுமா?” என்று கடுமையாக சாடி உள்ள நிலையில், ஆழ்துளை கிணறுகள் விவகாரத்தில் அரசு முழு மூச்சில்  நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதைத்தொடர்ந்து,  திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், நீர் உறிஞ்சு கிணறுகளை 24 மணி நேரத்தில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறை மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்ற குடிநீர் வடிகால் வாரியம் மக்களுக்கு உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 9445802145 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்புகொண்டு பொதுமக்கள் பயன்பெறலாம் என்று குடிநீர் வடிகால் வாரியம் அறிவித்துள்ளது.

No comments