கொடியவன் கோத்தாவால் தமிழ் மக்கள் வாக்கு தனக்கே எனச் சஜித்துக்கு ஆணவம்

சஜித் பிரேமதாச தரப்பினர் கோத்தா பெரிய கொடியவன் அதனால் தமிழ் மக்கள் தமக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர். தாம் தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கத் தேவையில்லை. ஆனால் தமிழ் மக்களின் வாக்கு தேவை என்ற அடிப்படையில் ஆணவமான போக்கு நீடிக்கின்றது என ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

வாழைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்க கட்டடத்தில் இன்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

எங்களுடைய மக்களின் உரிமைப் போரட்டத்தை, எனக்கு மறுக்கப்படுகின்ற விடயத்தை ஒட்டி என்ன நடவடிக்கைகளை கொழும்பில் எடுப்பேன் என்பதையும், அதுவும் உங்கள் கோட்டைக்குள் எனது போராட்டத்தை மேற்கொள்வேன். 2010ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் அன்னத்திற்கு வாக்களித்து தோல்வி பெற்றதால் மகிந்த ராஜபக்ஸ எங்களை பழிவாங்கினார்.

2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் அன்னத்திற்கு வாக்களித்தால் ஏதும் செய்வார்கள் என்றால் அதுவும் கைவிட்டு விட்டது. தற்போது மக்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் வீட்டில் விரக்தியுடன் இருந்து கொண்டிருக்கின்றனர். 2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் போல் தற்போது தேர்தல் இல்லை. தற்போது இனவெறியை கிழப்புகின்றனர். இனவெறியை கூடுதலாக கிளப்பும் பக்கத்தினர் வெல்லக் கூடிய வாய்ப்பு உள்ளது.

இலங்கை ஒரு ஒற்றையாட்சி என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை சர்வதேசத்திற்கு சொல்லிக் கொள்வதற்கும், பௌத்த மதம் அரசாங்கம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதையும், சகல மதத்திற்கும் சமத்துவம் இருக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கமைய நான் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ளேன்.

இரண்டு பேரினவாத கட்சிகளுக்கு மாறி மாறி வாக்களித்து நாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம். இவர்களுக்கு எங்களது வாக்குகள் தேவை. ஆனால் எங்களது மக்களின் பிரச்சனைகளை தீர்க்க மாட்டார்கள். சஜித் தரப்பு பார்க்கின்றது கோத்தா பெரிய கொடியவன் அதனால் தமிழ் மக்கள் எனக்குத்தான் வாக்களிக்க வேண்டும். நான் தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கத் தேவையில்லை. ஆனால் தமிழ் மக்களின் வாக்கு தேவை என்ற அடிப்படையில் ஆணவமான போக்கு நீடிக்கின்றது.

தற்போது யார் சிறந்த இனவெறியன் மற்றும் மதவெறியன் என்கின்ற போட்டி நடைபெறகின்றது. எங்களுக்கு இருவரின் யாரை வெல்ல வைக்க வேண்டும், யாரை தோற்கடிக்க வேண்டும் என்று கிடையாது. எங்களைப் பொறுத்தவரையில் சர்வதேசத்திற்கும்,  தென்னிலங்கைக்கும் ஒரு தெளிவான செய்தியை சொல்ல விரும்புகின்றோம்.

காணாமல் போனாருக்கு பதில் கூறி நீதி கிடைக்க வேண்டும். அரசியல் கைதிகளில் 94 பேர் உள்ளனர். ஆனால் நீதிமன்றத்தை அவமதித்த ஞானசார தேரருக்கு அன்னத்தின் ஜனாதிபதி மைத்திரிபால பொதுமன்னிப்பு வழங்கினார். ஜனாதிபதி மைத்திரிபால சிங்கள பாலை குடிப்பதால் சிங்கள ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கினார். அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள். நாங்கள் தமிழர்களை மாத்திரம் விடுதலை செய்ய சொல்லவில்லை. அனைவரையும் விடுதலை செய்யுங்கள் என்று தான் சொல்லுகின்றோம்.

பதினைந்து வருடங்களுக்கு மேல் சிறையில் உள்ளவர்களை ஜனாதிபதி மைத்திரிபால விடுதலை செய்வீர்களாக இருந்தால் 85 வீதம் சிறுபான்மை மக்களின் வாக்குகள் மூலம் வெற்றி பெற்று சிங்கள மக்களின் வாக்குகளில் தோல்வியடைந்த நீங்கள் உங்கள் பதவி முடிந்து செல்வதற்கு முன்னர் இவர்களை விடுதலை செய்து புண்ணிய காரியங்களை செய்யுங்கள்.

நீங்கள் முன்னாள் ஜனாதிபதியாக எங்கள் மண்ணிற்கு மீண்டும் வர வேண்டும் என்று எண்ணினால் விடுதலை செய்யுங்கள். இல்லையேல் வாழ்நாளில் வர முடியாத அளவிற்கு போராட்டங்களை நடாத்த முடியும். எங்களது மக்களை ஏமாற்றி விட்டு உங்களுக்கு மனசாட்சி இருந்தால் அரசியல் கைதிகளை ஒரு வாரத்தினுள் பத்து பேரையாவது விடுதலை செய்தால் நீங்கள் உண்மையான சிங்கள பௌத்தன் இல்லையேல் நீங்களும், சிங்கள இனவெறியன், பௌத்த மத இனவெறியன் என்பதாகும்.

மகிந்த ராஜபக்ஷ, கோத்தபாய ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, சரத்பொன்சேகா ஆகியோர் கூட்டு களவானி போல், கூட்டு கொலைகார கும்பல் இரண்டு தரப்பிலும் உள்ளது. ஆனால் என்ன ஒன்றில் கூடுதலாகவும் மற்றதில் குறைவாகவும் உள்ளது. ஆனால் நாங்கள் சர்வதேச ரீதியாக நீதியை கேட்போம். அரசியல் தீர்வு இலங்கைக்குள் இல்லை என்றால் சர்வதேச சமூகத்தின் உதவியுடன், ஐக்கிய நாடுகள் சபையின் உதவியுடன் வடக்கு கிழக்கு பிராந்தியத்தில் பொதுசன வாக்கெடுப்பை கோர நிர்ப்பந்திக்கப்படுவோம் என்பதை சொல்லிக் கொள்கின்றோம் என்றார். (கு)

No comments