நாட்டின் பாதுகாப்பு குறித்து வதந்தி - சவேந்திர விளக்கம்

பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக தேவையில்லாத வதந்திகளைப் பரப்பி, மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த சிலர் முற்படுவதாக இலங்கை இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

மேலும், இலங்கையின் பாதுகாப்பு ஸ்தீரமான நிலையில் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலவரம் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே சவேந்திர சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,  “இலங்கையின் பல்வேறு பகுதிகளில் ஈஸ்டர் தினத்தன்று தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்த சம்பத்திற்குப் பின்னர், நாம் பல்வேறு தீவிரவாதிகளை இலங்கையில் கைது செய்தோம். அதேபோல், தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் நாம் செய்துக் கொண்டுதான் வருகிறோம்.

இந்த நிலையில், ஒருசிலர் தேவையில்லாத செய்திகளை சமூக ஊடகங்கள் ஊடாக பரப்பி, மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்த முற்படுகிறார்கள். அந்தவகையில், மொரட்டுவையில் கட்டடமொன்று நிர்மாணிப்பதற்காக தோண்டப்பட்ட குழியில், மூன்று கைக்குண்டுகள் மீட்கப்பட்டன.

இவை மிகவும் பழைய வெடிகுண்டுகள். இதுதொடர்பாக உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, இலங்கை விமானப்படையின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரால் அந்தக் குண்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டன.

ஆனால், இந்த சம்பவத்தை சிலர் வேறு வகையில் காண்பிக்க முற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாம் இங்கு மக்களிடம் ஒன்றைக் கூறிக்கொள்ள வேண்டும். யாரும், இதுதொடர்பாக அச்சம் கொள்ளத் தேவையில்லை. இந்த குண்டுகள் எவ்வாறு இங்கு வந்தன என்பதை நாம் விசாரணை செய்து வருகிறோம். எவ்வாறாயினும், இதுதொடர்பாக மக்கள் எந்தவொரு சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை. நாம் இலங்கையர் என்ற ரீதியில் அனைவரது பாதுகாப்பையும் ஸ்தீரப்படுத்துவோம்.

இராணுவம் என்ற ரீதியாக நாம் மேற்கொள்ளும் சில விடயங்களை மக்களிடம் தெளிவுப்படுத்துவோம். நாம் செய்யும் எந்தவொரு செயற்பாட்டையும் மக்களுக்கு மறைத்துக்கொண்டு செய்ய மாட்டோம் என்பதையும் இவ்வேளையில் கூறிக்கொள்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.

No comments