சஜித்தை பகிரங்கமாக ஆதரிக்கமுடியாதுள்ளது:கவலையில் சுமந்திரன்!


சஜித்தை பகிரங்கமாக ஆதரிக்க முடியாத நிலையில் கூட்டமைப்பு இருப்பதாக அதன் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகள் நாமே! சரியான வேட்பாளரை முறையாக இனங்கண்டு நெறிப்படுத்தவேண்டியதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய எமது கடமையெனவும் எம்.ஏ.சுமந்திரன் கருத்து வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் நல்லவர் யார், கெட்டவர் யார் என்று நாம் ஆராய்ந்துகொண்டிருக்க முடியாது. இருவரும் கெட்டவர்கள்தான். கோத்தபாய ராஜபக்ச்; சிறுபான்மை மக்களின் வாக்குகள் தேவையில்லை என்று தெரிவித்துவிட்டார்.சஜித் பிரேமதாசவுடன் நாம் எமது நிலைப்பாடுகள் தொடர்பில் பேசலாம். எமது இனத்தையே அழித்தவர்கள் ராஜபக்சாக்கள்.ஆகவே நாம் நிதானமாகச் செயற்படவேண்டும்.

சிலவேளைகளில் நாம் வெற்றிபெறவேண்டும் என்று நினைக்கின்ற வேட்பாளர் எமது அறிவிப்பால் தோல்வியைத் தழுவலாம். அவ்வாறுதான் தென்னிலங்கையின் நிலைமை உள்ளது. இந்த இடத்தில் நாம் நிதானத்துடனும் பொறுமையுடனும் சிந்தித்து முடிவெடுக்கவேண்டும். தென்னிலங்கையின் வெற்றி வேட்பாளராகக் கோத்தா உள்ளார். எமது வாக்குகள் பொன்னானவை. தமிழர்கள் என்றில்லாமல் சிறுபான்மையின தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றாக ஒருவரைத் தெரிவுசெய்தால்தான் எமது குறிக்கோளை நாம் அடையலாம் எனவும் யாழ்ப்பாணத்தில் கட்சி ஆதரவாளர்களிடையே அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் தமது பிரதிநிதிகளாக எம்மைத்தான் தெரிந்துள்ளார்கள். வடக்கு – கிழக்கில் 18 நாடாளுமன்ற உறுப்பினர்களில் எமது கட்சியைச் சார்ந்தவர்கள் 16 பேர். மக்கள் எம்மைத் தெரிந்துள்ளார்கள். அவர்களுக்கு பொறுப்புடன் கடமையாற்றவேண்டியது எமது கடமை. நாம் எமது முடிவை நிதானமாக சிந்தித்தே அறிவிக்கவேண்டும்.
மைத்திரியை நாம் கொண்டுவந்து எதுவும் நடைபெறவில்லை என்கின்றார்கள். அது முழுக்க முழுக்கப் பொய். எதுவும் நடைபெறவில்லை என்று கூறமுடியாது. ஏராளமான அபிவிருத்திகள் நடைபெற்றன. பல ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன. பல அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஏன், நாடாளுமன்றம் அரசமைப்புச் சபையாக மாற்றப்பட்டு புதிய அரசமைப்பு நகல் கடந்த ஜனவரி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இவ்வாறு பல செயற்பாடுகள் நடைபெற்றன. இவற்றைத் தொடர்ந்து முன்னெடுக்கக்கூடிய ஜனாதிபதி வேட்பாளரை நாம் சிந்தித்து உரிய நேரத்தில் அறிவிப்போம் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை தெரிவிக்காத நிலையில் நாளை தபால் மூல வாக்களிப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments