ஐதேக வேட்பாளர் விவகாரத்தில் எதிரணியே கவனமாக இருந்தது

ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் எங்களை விட எதிரணியினரே ஆர்வமாக இருந்தனர் என்று அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் 73வது மாநாடு தற்போது கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்களில் இன்று மதியம் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ரவி கருணாநாயக்க மேலும்,

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தினை வைத்து எமது எதிரணியினர் பிரச்சினைகளை ஏற்படுத்த முயன்றனர். வேட்பாளர் விடயத்தை ஏன் தாமதப்படுத்துகின்றது, கட்சி பிளவுபடுமா?, ஐக்கிய தேசியக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் இருவரா? என பல்வேறு கேள்விகளை ஏற்படுத்தி குழப்பங்களை ஏற்படுத்த முயன்றனர்.

இவைகள் அனைத்தையும் ஒரு பக்கத்திற்கு தள்ளிவிட்டு, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சிறந்த வேட்பாளரை தற்போது களமிறக்கியுள்ளோம். ஜனநாயகத்தை பாதுகாப்பது மட்டுமன்றி மக்களின் வாழ்க்கையை சிறந்த முறையில் அமைப்பதே எங்களது நோக்கமாகும்.

அந்தவகையில் தற்போது நாம் செய்ய வேண்டிய முக்கிய விடயம், கிராமம் கிராமமாக சென்று எமது கொள்கைகள் குறித்து மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும். இதேவேளை, தொடர் குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் மிகவும் விரைவாக நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய முடிந்தமையை இட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.

அந்தகையில் நாட்டின் பாதுகாப்பை மேலும் வலுவடைய செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை நிச்சயம் முன்னெடுப்போம். மேலும் ஒரே நாடு, ஒரே சட்டம் என்றதன் அடிப்படையில் இந்த நாடு இயங்க வேண்டும். அதாவது நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் இந்த நாடு பொது என்பதை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும் - என்றார்.

No comments