சம்பந்தனுக்கு அடிபணிய மாட்டோம்- நாமல்


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கோ அல்லது அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கோ அடிபணிந்து தாங்கள் ஒருபோதும் செயற்படப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவினை ஆதரிக்கும் வகையில் பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று (புதன்கிழமை) மட்டக்களப்பு களுதாவளையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றி நாமல் ராஜபக்ஷ, “அரசாங்கமொன்று மாற்றமடைந்த பின்னர், மட்டக்களப்பின் அபிவிருத்திகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மட்டக்களப்பு பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பாக  அக்கறை செலுத்துவதாக தெரியவில்லை. இவர்களிடம், மக்களின் பிரச்சினைகளைக் கூறியவுடன் தீபாவளிக்குள் தீர்வு என்று கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றும் போக்கையே தொடர்ச்சியாக பேணி வருகிறார்கள்.

இப்படிக் கூறியே, 4 தீபாவளிகள் கடந்த நிலையில், அடுத்த சில நாட்களில் 5ஆவது தீபாவளியும் வரப்போகிறது. இனியும் மக்களை எப்படி ஏமாற்றுவது என்பதையே சம்பந்தன் உள்ளிட்ட தரப்பினர் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது ஐக்கிய தேசியக் கட்சியின் பங்காளிக் கட்சியாகத்தான் காணப்படுகிறது.

இதன் ஓர் அங்கமாகத் தான் வடக்கிலுள்ள தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து 13 அம்சக் கோரிக்கைகளை தயார் செய்துள்ளன. இதுதொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரின் நிலைப்பாடு என்ன என்று அறிவிக்கும் முன்னரே, கூட்டமைப்பினர் அவருக்கு ஆதரவினை வழங்க ஆரம்பித்து விட்டார்கள்.

தங்களின் தனிப்பட்ட தேவைகளுக்காகவே இவர்கள் இவ்வாறு செயற்படுகிறார்கள். ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியுடன் அரசாங்கத்தின் பிரதானிகள் நெருக்கமாக இருக்கும் காணொளிகள் வெளிவந்துள்ளன.

இது தெரிந்திருந்தும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவினை வழங்கி வருகிறது. இதனை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்த நிலைமையை மாற்ற வேண்டுமெனில், இந்த அரசாங்கத்தை மாற்றியே ஆகவேண்டும்.

மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து எமது வேட்பாளரை வெற்றிப் பெறச் செய்ய வேண்டும் என்று நாம் கேட்டுக்கொள்கிறோம். வடக்கு- கிழக்கிலுள்ள எந்தவொரு கட்சிக்கும் அடிபணிந்து செயற்படப்போவதில்லை என்பதையும் நாம் இவ்வேளையில் கூறிக்கொள்கிறோம்.

ரவூப் ஹக்கீமுக்கோ அல்லது இரா.சம்பந்தனுக்கோ நாம் என்றும் அடிப்பணியப் போவதில்லை. எமது செயற்பாடுகள் மக்களை நோக்கியதாகவே இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments