எமது போராட்டத்தை பணம் பெற்று சிதைக்க முயற்சி


வெளிநாட்டு பணத்தினை பெற்றுக்கொண்டு தமது போராட்டத்தை சிதைக்கும் நோக்குடன் ஒரு குழு செயற்படுவதாக காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்தனர்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க அலுவலகத்தில் இன்று (23) காலை 10 மணியளவில் ஊடக சந்திப்பொன்று இடம்பெற்றது.

குறித்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி கலாரஞ்சினி இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தமது போராட்டத்தினை வலுவிழக்க செய்து சிதைக்கும் நோக்குடன் புதிதாக ஒரு தரப்பு வெளிநாட்டு பணத்தினை பெற்றுக்கொண்டு செயற்படுவதாக தெரிவித்தார்.

குறித்த செயற்பாடு இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் செயற்பாடுகளிற்கு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுவரை காலமும் தமது பிள்ளைகளுக்காக வீதிகளில் நின்று போராட்டத்தை முன்னெடுத்த பெற்றோர்கள் இன்றும் கண்ணீருடன் வாழ்கின்றனர். இவ்வாறான நிலையில் வெளிநாடுகளிலிருந்து வழங்கப்படும் பணத்திற்காக போராட்டத்தை சிதைக்கும் நோக்குடன் சிலர் செயற்படுவதாகவும், அவர்களை இனங்கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

No comments