சம்பந்தன் குறித்து பாடமெடுத்த நாமல்

தீபாவளிக்கு தீர்வு கிடைக்கும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறும் கருத்தை இனியும் தமிழர்கள் நம்பக்கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சிக்கு இன்று (16) விஜயம் மேற்கொண்டிருந்த அவர், செய்தியாளர்களிடம் கருத்துரைக்கையிலேயே இவ்வாறு கூறினார்.
அவர் கூறுகையில், “மஹிந்த ராஜபக்ஷ காலத்தில், வடக்கிலுள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டன. இதுபோல எதிர்க்காலத்திலும் நாம் அனைத்து மக்களுக்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.
இங்குள்ள மக்களுக்கு இன்னும் வாழ்வாதாரம் தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. எனினும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இதுதொடர்பாக எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
எனினும், நாம் மீண்டும் இந்த நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றியவுடன் இலங்கை வாழ் அனைத்து மக்களும் நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவோம். அத்தோடு, மத்தள விமான நிலையத்தை நாம் அமைத்தோம். எனினும், நாம் அம்பாந்தோட்டை சர்வதேச விமான நிலையம் என்று இதற்கு பெயரிடவில்லை.
இந்த அரசாங்கத்தினர் பலாலி விமான நிலையத்தை யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் என்று தற்போது பெயரிட்டுள்ளார்கள். இது முற்றுமுழுதாக தேர்தலை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட ஒரு செயற்பாடாகவே நாம் கருதுகிறோம்.
இந்த விமான நிலையத்தில் ஒரு கட்டடம் கூட நிர்மாணிக்கப்படவில்லை. சுங்க அதிகாரிகள் எங்கு இருப்பார்கள் என்று தெரியாது. சர்வதேச விமான நிலையம் ஒன்றுக்கு இருக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள்கூட அங்கு இல்லை.
ஆனால், வடக்கு மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்கேனும் இந்த அரசாங்கத் தரப்பினர், இவ்வாறான அபிவிருத்திகளை மேற்கொள்கிறார்கள் என்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம்.
உண்மையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் நிலையை நினைத்து நாம் கவலையடைகிறோம். தீபாவளிக்கு தீர்வு கிடைக்கும் என்று கடந்த 83ஆம் ஆண்டிலிருந்து சம்பந்தன் கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால், இவர்களால் தமிழர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற இதுவரையில் முடியாமல்தான் இருக்கிறது. இது முற்றுமுழுதாக தமிழ் மக்களை ஏமாற்றும் செயற்பாடாகும்.
தமிழர்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்டு இவ்வாறான விடயங்களில் தான் இவர்கள் தொடர்ந்தும் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். எனவே, இதனை மக்கள் உணர்ந்து செயற்பட வேண்டும் என்று இவ்வேளையில் நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments