சஜித் போஸ்டருடன் சிறிதரன்

யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க கல்லுண்டாய் வெளியில் புதிதாக அமைக்கப்பட்ட வீட்டுத் திட்டத்தை பார்வையிட்டார்.
அந்நிகழ்வில் பிரதமருடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அணியும் கலந்துகொண்டது.
இதன்போது, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் ஒளிப்படங்கள் பொறிக்கப்பட்ட துண்டறிக்கைகளும் விநியோகிக்கப்பட்டன.
ஜனாதிபதி வேட்பாளர் எவருக்கு தமது ஆதரவு என தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவிக்காத நிலையில் ரணில் விக்ரமசிங்கவின் இந்த பரப்புரை நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.
இது பரப்புரை நிகழ்வு அல்லாமல் அரச முறை நிகழ்வானால் தேர்தல் விதிமுறையை மீறி ஜனாதிபதி வேட்பாளரின் துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டமை தேர்தல் விதிமுறை மீறலாகும்.
கல்லுண்டாய் வெளியில் மீள்குடியேற்ற, புனர்வாழ்வு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் 80 வீடுகள் அமைக்கப்பட்டன. அந்த வீட்டுத் திட்டத்தினை பார்வையிடுவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அங்கு சென்றிருந்தார்.
அங்கு சென்ற பிரதமருடன், கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சோ. சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவஞானம் ஸ்ரீதரன், ஈ.சரவணபவன், சிவமோகன், வடமாகாண சபையின் தவிசாளர் சி.வி.கே.சிவஞானம், யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் உள்ளிட்டவர்களும் சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments