வைரல் ஆகும் மோடியின் தமிழ் கவிதை!

மாமல்லபுரம் கடற்கரை அனுபவம் குறித்து பிரதமர் மோடி எழுதிய கவிதையின் தமிழாக்கத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையிலான சந்திப்பு கடந்த 11, 12 ஆகிய தேதிகளில் மாமல்லபுரத்தில் நடந்தது. சீன அதிபரோடு அர்ஜுனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில் ஆகிய இடங்களைப் பார்வையிட்ட பிரதமர் மோடி, அவருக்கு இரவு விருந்தும் அளித்தார். அதைத் தொடர்ந்து 12ஆம் தேதி காலை மாமல்லபுரம் கடற்கரையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட பிரதமர், அங்கிருந்த குப்பைகளை அகற்றினார். மேலும் அங்குள்ள பாறையில் அமர்ந்து கடலின் அழகையும் ரசித்துப் பார்வையிட்டார்.
அந்த நேரத்தில் பிரதமர் மோடி எழுதிய கவிதையின் தமிழாக்கத்தை, “சில நாட்களுக்கு முன்பு மாமல்லபுரத்தின் அழகிய கடற்கரையில் இருந்தபோது நான் எழுதிய கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு இங்கே” என்று கூறி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அலைகடலே, அடியேனின் வணக்கம் எனத் தொடங்கும் அந்தக் கவிதையில் கடலின் சீற்றம், அமைதி, ஆழம், பெருமை ஆகியவற்றை சுட்டிக்காட்டியுள்ளார். எல்லையில்லாத ஆற்றல் இருந்தாலும் கரையைக் கடக்காமல் கண்ணியம் இழக்காமல் பணிவின் பெருமையைக் கடல் உணர்த்துவதாகவும் அந்தக் கவிதையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் பிரதமரின் கவிதையை வாழ்த்தியும் நன்றி தெரிவித்தும் நடிகர் விவேக் மற்றும் தயாரிப்பாளர் தனஞ்செயன் ஆகியோர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர். இதற்கு ட்விட்டர் மூலமாகவே பதிலளித்துள்ள பிரதமர் மோடி, “உலகின் பழைமையான மொழியில் எனது எண்ணங்களை வெளிப்படுத்தியதில் மகிழ்ச்சி. தமிழ்மொழி அழகானது. தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments