சிலி நாட்டில் அரசுக்கு எதிராக பாரிய போராட்டம்; இராணுவங்களை வைத்து விரட்டியடிப்பு!

மத்திய அமெரிக்க நாடான சிலியில் அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

அக்டோபர் 6 ஆம் தேதி மெட்ரோ ரயில் கட்டணத்தை 800 முதல் 830 சிலி பெசோக்கள் வரை அரசாங்கம் உயர்த்தியது. இதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உருவானது. கடந்த வெள்ளிக்கிழமை சாண்டியாகோ மற்றும் பிற நகரங்களில் மெட்ரோ ரயில் கட்டண உயர்வை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெள்ளிக்கிழமை அன்று போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க சாண்டியாகோ மற்றும் சாகபுகோ மாகாணங்களிலும், புவென்ட் ஆல்டோ மற்றும் சான் பெர்னார்டோவின் பெருநகர நகராட்சிகளிலும் படையினர் நிறுத்தப்பட்டனர். 1,500 பேர்  கைது செய்யப்பட்டனர் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தொடர்ந்து சனிக்கிழமை நடந்த வன்முறையை அடக்க பாதுகாப்புப் படையினர் ஒரு கூட்டத்தை நீர் பீரங்கிகளைக்கொண்டு கலைக்கச் செய்தனர். எனினும் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் சிலியில் அரசுக்கு எதிராக நடந்த போராட்டங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
தொடர்ந்து சிலியில் வன்முறை நீடிப்பதால் அங்கு பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, ''நாங்கள் மக்களின் பாதுகாப்புக்காக இத்தகைய நடவடிக்கைகளை எடுக்கிறோம். இது பொதுமக்களுக்கு எதிரான நடவடிக்கை இல்லை. விரைவில் அனைத்தும் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.



No comments