காணாமல் ஆக்கப்பட்டோரது சிறார்களிற்கும் போராட்டம்?


சர்வதேச சிறுவர் தினம் உலகநாடுகளிலும் இலங்கையிலும் கொண்டாடப்படுகின்ற தருணத்தில் வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இராணுவத்தின் கைகளில் ஒப்படைக்கப்பட்ட மற்றும் கடத்தப்பட்ட சிறுவர்களுக்கான நீதி கோரியும், வலிந்து காணாமலாக்கப்பட்ட பெற்றோரைத் தொலைத்த சிறுவர்களின் உரிமைகளுக்காகவும் வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலும் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

சர்வதேச சிறுவர் தினமான இன்று செவ்வாய்க்கிழமை வடகிழக்கு தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டுள்ள சிறார்களிற்கு நீதி கோரியே கவனயீர்ப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளிற்கு நீதி கோரி மூன்று வருடங்களாக போராடிவரும் அவர்கள் இன்று வடகிழக்கு தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டுள்ள சிறார்களிற்கு நீதி கோரி போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
யாழ்ப்பாணம் ,வவுனியா,அம்பாறை மற்றும் கிளிநொச்சி,திருகோணமலை மாவட்டங்களில் இன்றைய தினம் காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தன.

குறிப்பாக திருகோணமலை மற்றும் அம்பாறையில் காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்ப சிறார்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.

இறுதி யுத்தத்தின் போது தமது பெற்றோர் சகிதம் படையினரிடம் சரணடைந்த நூற்றுக்கணக்கான சிறார்கள் பற்றி இன்று வரை தகவல்கள் இல்லாதுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments