பயங்கரவாதி ஷஹ்ரான் போல் ஹிஸ்புல்லா; சாடுகிறார் மன்சூர்

சமூக பற்றாளனாக தன்னை அடையாளப்படுத்திகொண்டு ஈன செயலில் ஈடுபட்ட பயங்கரவாதி ஷஹ்ரானை போன்றே வேட்பாளர் ஹிஸ்புல்லாவை பார்க்கிறேன் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்ஸூர் தெரிவித்தார்.

சம்மாந்துறையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,

சிறுபான்மைகள் இல்லாத நாடாக இலங்கையை மாற்றியமைத்து பௌத்த தேசியத்தை அமுல்படுத்த  வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவரும்  மொட்டு அணி, இந்த நாட்டை இனவாத பரப்புரையால் வெற்றிகொள்ள முயற்சிக்கின்றது. ஆகையால் அத்தகையவருடன் இணைந்து  செயற்படவேண்டிய தேவை எமக்கு கிடையாது.

கடந்த ஏப்ரல் குண்டுவெடிப்புக்கு பின்னர் சம்மாந்துறையில் அதிகளவான முஸ்லிம் மக்கள், கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட வரலாறு மிகவும் கொடுமையானது. எந்நேரத்திலும் முஸ்லிங்கள் மீது பயங்கரவாதி எனும் குற்றசாட்டை முன்வைத்து கைது செய்யப்படும் நிலை இருந்து வந்தது.

இதற்கு காரணம் சமூக பற்றாளனாக தன்னை அடையாளப்படுத்திய ஒருவனின் ஈன செயலே. சமூகத்தின் மீது அக்கறை இருப்பது போல காட்டிக்கொண்டு வெளியே வருகிறவர்கள் மீது  மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். அந்தவகையில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள ஹிஸ்புல்லாஹ்வையும்  சஹ்ரான் போன்றே நான் பார்க்கின்றேன்.

கோட்டாபயவை ஜனாதிபதியாக்க யார் யாரெல்லாம் முயற்சிக்கிறார்களோ அவர்களையெல்லாம் நான் சமூக விரோதிகளாகவே பார்க்கிறேன். மேலும் வேட்பாளர் கோட்டாபயவுக்கு பின்னால் உயிரை பாதுகாக்க வேண்டி அணிவகுத்தோ வேட்பாளர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு பின்னால் முட்டாள் தனமாகவோ இந்த சமூகம் செல்ல முடியாது.

இந்த நாட்டிலிருந்து எம்மை துரத்த யாருக்கும் அதிகாரமில்லை. இப்போது இருக்கின்ற மிகப்பெரிய சவாலும் எதிரியும் ஹிஸ்புல்லாஹ்வே. அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு இருக்கும் ஆளுமை, பக்குவம் என்பன வேறு யாருக்குமில்லை. சிறுபிள்ளைத்தனமான கருத்துக்களுக்கு அவர் பதிலளிக்கவேண்டிய தேவையில்லை - என்றார்.

No comments