மலையக மக்களுக்காக போலி கண்ணீர் வடிக்கும் மஹிந்த

தீபாவளியை முன்னிட்டு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வருடாந்தம் வழங்கப்படும் முற்பணக் கொடுப்பனவை உடனடியாக வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கோரியுள்ளார்.
அரசாங்கத்திடமும் தனியார் நிறுவனங்களிடமும் அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திகாந்தனை, இன்று (ஞாயிற்றுக்கிழமை) எதிர்க்கட்சித் தலைவர் நேரில் சென்று பார்வையிட்டார்.
அத்தோடு, அவரிடம் சுமார் 30 நிமிடங்கள் வரை கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போது, அவருடன் மேலும் சில முக்கியஸ்தர்களும் வருகைத் தந்திருந்தனர்.
இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,  “மலையக மக்களுக்கு தீபாவளிக்கு சிறிய சம்பள முற்பணம் வழங்கப்படும். ஆனால் இம்முறை அதனை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு நாம் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளோம்.
அத்தோடு, நாம் இன்று பிள்ளையானை சிறைக்குச் சென்று பார்வையிட்டோம். அவரது உடல் நலம் தொடர்பாகவே விசாரித்து வந்துள்ளோம்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தல் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. அனைத்து மக்களும் சரியான முடிவொன்றை எடுக்க வேண்டும்.
பிழையான முடிவுகளை எடுத்துவிடக்கூடாது என்பதைத்தான் நாம் அனைவருக்கும் தெரிவிக்கின்றோம். மக்கள் இம்முறை தெளிவாக வாக்களிப்பார்கள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
இந்த அரசாங்கம் எந்தவொரு தரப்புக்கும் சேவை செய்யவில்லை. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் நான் செய்த அபிவிருத்திகளை தவிர்த்து வேறு அபிவிருத்திகளைக் காண முடியாதுள்ளது.
எனவே, ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் சிந்தித்து வாக்களிப்பார்கள் என்றே நாம் நம்புகிறோம்” என தெரிவித்தார்.

No comments